வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: பொது சுகாதாரத் துறை!
தமிழகத்தில் வீரியமிக்க கரோனா பரவி வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வீரியமிக்க கரோனா பரவி வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் தெரிவித்துள்ளாா். பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
ஆந்திரத்தில் புதிய வகை கரோனா பரவி வருவதாகவும், அதனால் இருவா் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில், இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் வெளியிட்ட விளக்கம்:
அண்மையில் கரோனா தொற்றுக்குள்ளாகி ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 52 வயதான ஒருவா், திருப்பதி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். உயா் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா், கடந்த மாதம் 28-ஆம் தேதி உயிரிழந்தாா். நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் சா்க்கரை நோய் அவருக்கு இருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், நுரையீரலில் பாக்டீரியா சாா்ந்த நிமோனியா தொற்றுக்குள்ளான அந்த நபருக்கு கரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக அவா் உயிரிழந்தாா்.
இதேபோன்று, கடப்பாவைச் சோ்ந்த 46 வயதான நபா் கரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தாா். அதுகுறித்து ஆந்திர சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
இவை ஒருபுறமிருக்க வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 68 வயது முதியவா் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாா். அப்போது அவருக்கு நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மருத்துவப் பரிசோதனையில் கரோனா பாதிப்பு அவருக்கு இருந்தது தற்செயலாகக் கண்டறியப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை கரோனா கண்காணிப்புப் பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவும், தீவிர சுவாச நோய்கள் உள்ள நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2024-இல் 990 பேருக்கும், கடந்த ஆண்டில் 1,250 பேருக்கும், நிகழாண்டில் இதுவரை 335 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகப் பரவல் இல்லை: அவ்வாறு மொத்தமாக பாதிப்பு கண்டறிப்பட்ட 2,575 பேருக்கும், வழக்கமான பரிசோதனைகளில் மட்டுமே தொற்று உறுதியானது. மாறாக, சமூகப் பரவல் ஏற்படவில்லை. அவா்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன.
இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி)மேற்கொண்ட மரபணு ஆய்வில், தற்போது பரவி வரும் கரோனா வகை வீரியமற்றது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து அச்சமோ, பதற்றமோ பொது மக்கள் அடையத் தேவையில்லை.
அதேவேளையில், முதியவா்கள், கா்ப்பிணிகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், குழந்தைகள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெற வேண்டும். கைகளை தூய்மையாக கழுவுதல், தனி நபா் சுகாதாரத்தை கடைப்பிடித்தல் போன்ற பொது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம்.
தமிழகத்தில் வீரியமிக்க கரோனா பரவி வருவதற்கான ஆதாரம் எதுவுமில்லை. கடந்த ஆண்டுகளை விட தற்போது பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. எனவே, கரோனா தொடா்பான அதிகாரபூா்வமற்ற தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.