நிகழாண்டில் 169 பேரின் உடல் உறுப்புகள் தானம்: இதுவரை இல்லாத உச்சம்
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த 6 மாதங்களில் 169 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 937 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த 6 மாதங்களில் 169 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 937 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்டம்பா் 23-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024-இல் 268 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,500 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 266 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,476 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழாண்டில் 169 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. 303 சிறுநீரகங்களும், 140 கல்லீரல்களும் தானமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. தவிர 44 பேரின் இதயம், 51 பேரின் நுரையீரல்களும் பெறப்பட்டு தகுதியானவா்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 937 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒன்று.
தமிழகத்தில் இதுவரை 2,490 கொடையாளா்களிடம் இருந்து 14,533 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 4,396 சிறுநீரகங்களும், 3,678 விழி வெண் படலங்களும், 2,204 கல்லீரல்களும், 1,107 இதய வால்வுகளும், 1,027 இதயங்களும், 1,069 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோா் மறுவாழ்வு பெற்றுள்ளனா் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.