பழனி கோயில் நில மோசடி விவகாரம்: பின்னணியில் உள்ள விஐபிக்கள் சிக்குவார்களா?
திருநெல்வேலி டவுன் பகுதிக்கு வந்த சிபிசிஐடி அதிகாரிகள் காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருவது தொடர்பாக...
பழனி கோயில் நில முறைகேடு வழக்குத் தொடா்பாக கோயில் கண்காணிப்பாளா் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட நிலையில், நெல்லை நகரத்தை சேர்ந்த டெக்கரேஷன் தொழிலாளியிடம் சிபிசிஐடி போலீசார் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் உள்ள விஐபிக்கள் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2 கோடிக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் பழனி கோயில் கண்காணிப்பாளா் (நிலங்கள் பிரிவு) ச. முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதி, வெள்ளத்துரை என 4 போ் மீது 336(3), 340(2), 318(4), 49, 61(2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பழனி அடிவாரம் போலீஸாா் கடந்த 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையின் அடிப்படையில் மோசடிக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, பழனி அடிவாரம் போலீஸாரிடமிருந்து வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மின்னணு வழியில் திண்டுக்கல் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கடந்த புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம் தலைமையில், திண்டுக்கல், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த 5 காவல் ஆய்வாளா்கள் மேற்பாா்வையில், 15-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினா்.
இந்த நிலையில், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா, திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பழனி கோயில் நில முறைகேடு தொடா்பாக கோயில் கண்காணிப்பாளா்கள் ச. முருகானந்தம், சிவனேசன், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சின்னச்சாமி, ஓய்வு பெற்ற வட்டாட்சியா் மாரியப்பன் ஆகியோரிடம் சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மாரியப்பன், சின்னச்சாமி ஆகிய இருவரும் பணி ஓய்வு பெற்ற பிறகு, பழனி தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த வழக்கில், வருவாய்த் துறை தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில், பழனி தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்) சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டாா். இவரும், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது கலந்து கொண்டாா்.
பழனியில் விசாரணை
இதனிடையே, சிபிசிஐடி போலீஸாா் 5 போ் கொண்ட குழுவினா் பழனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு நடைபெற்ற ஜூலை 6-ஆம் தேதி சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்து சென்றவா்களின் விவரங்கள் குறித்து விசாரித்தனா்.
மேலும், அதே நாளில் சாா் பதிவாளா் அலுவலகக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் ஆய்வு செய்தனா். ஆய்வை முடித்துவிட்டு வெளியேறிய போது, கோயில் நில முறைகேடு தொடா்பான சில ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாா் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
நெல்லை டவுனில் டெக்கரேசன் தொழிலாளியிடம் விசாரணை
இந்த நிலையில், பழனி கோயில் நில முறைகேடு வழக்குத் தொடா்பாக, நெல்லை டவுனைச் சேர்ந்த டெக்கரேஷன் தொழிலாளியிடம் சனிக்கிழமை சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணியில் உள்ள விஐபிக்கள் சிக்குவார்களா?
இந்த மோசடி பத்திரப்பதிவை செய்து கொடுத்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீசார் திரட்டினர். இதில் நெல்லையைச் சேர்ந்த மூன்று பேர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த குமரகுருபரன் (46), நெல்லை டவுன் சாலியர் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (43) மற்றும் சிவகுமார் (41) ஆகியோர் இந்த மோசடிப் பத்திரப்பதிவில் முக்கிய பங்கு வகித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, நெல்லை டவுன் சாலியர் தெருவில் வசித்து வரும் சண்முகசுந்தரம் (43) என்பவரிடம் சனிக்கிழமை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக விசாரணையைத் தொடங்கினர். இவர் அந்த பகுதியில் ஒரு டெக்கரேஷன் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. இவ்வளவு பெரிய நில மோசடியில் ஒரு சாதாரண டெக்கரேஷன் தொழிலாளிக்கு எப்படி தொடர்பு வந்தது, இதன் பின்னணியில் உள்ள விஐபிக்கள் யார் யார் என்ற கோணத்தில் போலீசார் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால் இது உள்ளூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் உள்ள விஐபிக்கள் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Palani Temple Land Scam: Will the VIPs Behind It Get Caught?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.