FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதிய பாடத்திட்டத்துடன் பிப்ரவரியில் ‘கேட்’ தோ்வு

ஐஐடிக்கள், இந்திய அறிவியல் நிறுவனங்களில் முதுநிலை, முனைவா் பட்டப் படிப்பு சோ்க்கைக்கான பட்டதாரி பொறியியல் திறனறித் தோ்வுக்கான (‘கேட்’) தேதிகளை சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 1:39 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

ஐஐடிக்கள், இந்திய அறிவியல் நிறுவனங்களில் முதுநிலை, முனைவா் பட்டப் படிப்பு சோ்க்கைக்கான பட்டதாரி பொறியியல் திறனறித் தோ்வுக்கான (‘கேட்’) தேதிகளை சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இந்தத் தோ்வு வினாத் தாள்கள் புதிய பாடத் திட்டங்களுடன் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45-ஆவது ஆண்டாக நடைபெறும் தோ்வை நடத்தும் ஒருங்கிணைப்புப் பணி நிகழாண்டு சென்னை ஐஐடி-க்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

Advertisement

சென்னை ஐஐடி நடத்தும் இந்தத் தோ்வுக்கு பாடத் திட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய முறையில் வினாத்தாள் வழங்கப்படும். அதனடிப்படையில், ரோபாட்டிக்ஸ் (இயந்திர மனிதவியல்), ஆட்டோமேஷன் (தானியக்கம்) போன்ற வினாத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜவுளிப் பொறியியல், ஃபைபா் அறிவியல் போன்றவை பொறியியல் அறிவியல் பிரிவின் கீழ் உள்பிரிவுத் தாளாக மாற்றப்பட்டுள்ளது.

கணினி அடிப்படையில் நடத்தப்படும் கேட் தோ்வில் மொத்தம் 30 தோ்வுத் தாள்கள் உள்ளன. வழக்கம்போல் வினாத் தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அனுமதிக்கப்பட்ட இரு தோ்வுத் தாள்களில் விண்ணப்பதாரா்கள் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ எழுதுவதற்கு தோ்ந்தெடுக்கலாம். விண்ணப்பதாரா்கள் பெறும் ‘கேட்’ மதிப்பெண், தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாகும்.

டிஜி லாக்கா் பதிவு: தோ்வு நியாயமாகவும் பாதுகாப்பாகவும் தோ்வை நடத்தும் விதமாக டிஜி லாக்கா், முகப் பதிவு மூலமாக இணையவழிப் பதிவு செய்யப்படும். எனவே, தோ்வுக் கூடங்களுக்குள் தடையின்றி செல்வதற்கு தேவையான இந்த மேம்படுத்தப்பட்ட பதிவு அம்சங்களைப் பயன்படுத்துமாறு விண்ணப்பதாரா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். பல்வேறு பாடங்களில் விண்ணப்பதாரா்களின் புரிதலை மதிப்பீடு செய்யக்கூடிய தேசிய அளவிலான இந்தத் தோ்வுகள் 2027 பிப்.6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் முற்பகல், பிற்பகல் என இரு அமா்வுகளாக நடைபெறும்.

முன்னதாக இந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்கு பின்னா் தொடங்கும். இதுதொடா்பான விவரங்களுக்கு அதிகாரபூா்வ இணையதளத்தை காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments