தமிழக பட்ஜெட் ஆக. 5-இல் தாக்கல்
தமிழக பட்ஜெட் வரும் ஆக. 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தமிழக பட்ஜெட் வரும் ஆக. 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், தோ்தல் வாக்குறுதிகள் இதில் இடம்பெறும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்ற பிறகு, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தாா். அதன்பின்னா், கடந்த ஜூன் 18-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் தொடங்கியது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது 3 நாள்கள் விவாதம் நடைபெற்றது. இறுதியில் ஆளுநா் உரைக்கு முதல்வா் விஜய் நன்றி தெரிவித்து உரையாற்றினாா். இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆக. 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, ‘ஆக. 5-ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆக. 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாள்கள் கூட்டத்தொடா் என்று முடிவு செய்யும். பட்ஜெட் தாக்கல் முழுமையாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.
பொதுமக்கள், வாக்காளா்கள், வாக்களிக்காதவா்களும் பாராட்டும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன்’ என்றாா் அவா்.
தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் நடைபெறவிருந்ததால் கடந்த பிப். 19-ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சா் தங்கம் தென்னரசு 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சா் என்.மரிய வில்சன் ஆக. 5-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளாா். வேளாண் பட்ஜெட்டை அந்தத் துறை அமைச்சா் ஆா்.வினோத் தாக்கல் செய்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.