மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள் அமைத்தது தமிழக அரசு!
மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளதைப் பற்றி...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் மூலம் போதிய அளவு மின்சாரம் கிடைக்கப்பெற்று வரும் நிலையில், சில நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் புதைவட கேபிள் பழுது, மின்மாற்றி கோளாறு, மின்பாதை துண்டிப்பு, மழை மற்றும் காற்று உள்ளிட்ட பருவநிலை காரணிகள், ஆர்.எம்.யூ. பழுது மற்றும் அதிஉயரழுத்த மின்மாற்றி பழுதுகள் ஏற்படும் மின் போன்ற எதிர்பாராத காரணங்களால் அவ்வப்போது தடைகளை விரைவாக சரிசெய்து, நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் அமைச்சர் ஆர். நிர்மல் குமார் தலைமையில் தலைமைச் செயலர் முன்னிலையில் நேற்று (ஜூன் 9) விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 உயர்நிலைக் கண்காணிப்பு குழுக்கள், 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் தொடக்கி வைத்தார்.
Advertisement
Advertisement
ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள மின்னகம் நீங்கலாக 70 மின்தடை நீக்க மையங்களுடன் கூடுதலாக தற்போது 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் உருவாக்கப்பட்டு உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.
கூடுதலாக, 5 எம்.ஆர்.டி. சிறப்புக் குழுக்கள், உயரழுத்த மின் புதைவட மின் கேபிள் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்யும் உபகரணங்களுடன் கூடிய 4 சிறப்பு வாகனங்களும், உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மேல்நிலை கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய 7 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.
இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் மின் தடைகளை கண்காணித்து, மின் விநியோக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 10 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களுக்கு தேவையான கூடுதல் கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ஏற்கனவே செயல்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் மொபைல் மீட்புக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
சிறப்பு கண்காணிப்புக் குழுக்களின் முக்கிய பணிகள்
முக்கிய மின் தடைகள் மற்றும் கண்காணித்தல், பழுதுகளை நிகழ்நேரத்தில் பெரிய அளவிலான பழுதுகள் தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெறுதல்,
மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணிகளின் முன்னேற்றத்தை கண்காணித்தல்,
பின்னூட்டம் உள்ளிட்ட மாற்று மின் வழங்கல் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல்,
மனிதவளம், வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் பராமரிப்புப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்,
மின்னகம் மற்றும் புகார் மையங்கள் மூலம் பெறப்படும் புகார்களை ஆய்வு செய்தல்,
மின் விநியோக மீட்பு குறித்த தகவல்களை நுகர்வோருக்கு உடனுக்குடன் தெரிவிப்பதை உறுதி செய்தல்,
மீண்டும் மீண்டும் பழுதுகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து நிரந்தர தீர்வுகளுக்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
சிறப்பு கவனம் செலுத்தப்படும் பகுதிகள்
மீண்டும் மீண்டும் ஏற்படும் கேபிள் பழுதுகள், நீண்ட நேர மின் தடைகள், மின்மாற்றி கோளாறுகள், பீடர் துண்டிப்புகள், துணை மின் நிலைய உபகரண கோளாறுகள், குடிநீர், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் பகுதிகள், மின்னகம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அதிக புகார்கள் பெறப்படும் பகுதிகள் ஆகியவற்றின் மீது இந்தக் குழுக்கள் சிறப்பு கவனம் செலுத்தும்.
கள அலுவலர்களுக்கு கூடுதல் நிதி அதிகாரம்
அவசரகால பராமரிப்பு மற்றும் உடனடி மின் விநியோக மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில் தலைமைப் பொறியாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை, கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு ரூ.75,000 வரை, செயற்பொறியாளர்களுக்கு ரூ.50,000 வரை, உதவி செயற்பொறியாளர்களுக்கு 5.25,000 வரை மற்றும் உதவிப் பொறியாளர்கள் / இளநிலைப் பொறியாளர்களுக்கு ரூ.10,000 வரை அவசர செலவினத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவினங்களுக்கும் தேவையான தொகை உடனடியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வலுப்படுத்தப்படும் மின் சேவை
தமிழ்நாடு தற்போது சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. 1,910 துணை மின் நிலையங்கள், 4.47 லட்சத்திற்கும் அதிகமான மின்மாற்றிகள் மற்றும் விரிவான மின் விநியோக கட்டமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பரந்த மின் கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகளை விரைவாக சரிசெய்து, மின்தடைகளின் கால அளவை குறைத்து, நுகர்வோர் திருப்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் செயல்படும்.
பொதுமக்களுக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சார சேவையை வழங்குவதே அரசின் உயரிய முன்னுரிமை என்றும், மின் தடை தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்ச நேரத்தில் மின் விநியோகத்தை மீட்டெடுக்க அனைத்து அதிகாரிகளும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.