நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா சனிக்கிழமை(ஜூன் 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா சனிக்கிழமை(ஜூன் 20) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழா ஆண்டுதோறும் பத்து நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின் போது ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்கள் நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளில் வளம் வரும். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்ப்பார்கள்.
Advertisement
Advertisement
அதன்படி, நிகழாண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா சனிக்கிழமை காலை (ஜூன் 20) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இதற்காக கோயில் நடை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு விஸ்வரூப தரிசனமும் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. கோயில் மகா மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் வழிபாடுகளுடன் தொடங்கின. தொடர்ந்து தங்கக் பூங்கோவில் சப்பரத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் திருவிழா மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பிரதான தங்கக் கொடிமரத்தின் முன்பு சிறப்பு ஹோமங்கள் வழிபாடுகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6.30 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள் வாத்தியங்கள் இசைக்க பிரதான தங்கக் கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாடச உபச்சார மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
திருவிழா நாள்களில் காலை, மாலையில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 23 ஆம் தேதியும், தங்கச் சப்ரத்தில் கங்காள நாதர் எழுந்தருளி வீதியுலா வரும் 27 ஆம் தேதியும், திருத்தேரோட்டம் வரும் 28 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா நிறைவடைகிறது.
இந்த திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து எடுத்துள்ளனர்.
The Aani festival at the Nellaiappar-Gandhimathi Amman Temple has commenced in a grand manner with the flag-hoisting ceremony
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.