அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது குறித்து...
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2026 ஜனவரி 1 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
”முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது.
Advertisement
இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 2026 ஜனவரி 1 முதல் முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், முதல்வர் விஜய் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 2026 ஜனவரி 1 முதல், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.
இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 2026 ஜனவரி 1 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.