FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்த முதல்வர் விஜய்!

மேம்பட்ட மின் ஆய்வகங்களை திறந்து வைத்த முதல்வர் சி. ஜோசப் விஜய்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்த முதல்வர் விஜய்! - படம்: தமிழக அரசு
பகிர்:

30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் Schneider Electric India Pvt. Ltd.  நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட
மின் ஆய்வகங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (அக். 28) திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், தற்போது சுமார் 67,000 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர். 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தல்

தமிழ்நாட்டின் வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, மதுரை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ. 5.10 கோடி செலவில் Schneider Electric India Pvt. Ltd.  நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம், 9,250 மாணவ, மாணவியர் ஆண்டுதோறும் பயிற்சி பெற்றுப் பயனடைவர். 

Advertisement

Advertisement

புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் முன்னிலையில், 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 6.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திடுவதற்காக Schneider Electric India Private Limited நிறுவனத்திற்கும்,  தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் எலக்ட்ரிஷியன் மற்றும் வயர்மேன் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்குப் பயிற்சி உபகரணங்களை முதல்வர் வழங்கினார்.  

59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் காசோலைகள் வழங்குதல்

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில், தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின் தொழில்சார் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 59-வது மாநில அளவிலான திறன் போட்டி – 2026 நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கிப் பாராட்டினார்.

அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல்

அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்று, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 60 மாணவ, மாணவியருக்கு முதல்வர், இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

கடந்த ஆண்டு, 40 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று  மாநில தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் இருந்தது. இவ்வாண்டு 60 மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பெற்று அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணிநியமன ஆணைகள் வழங்குதல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காகத் தெரிவு செய்யப்பட்ட 673 புதிய இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்வர் இன்று வழங்கினார்.

முன்னதாக, முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாணவர்களின் திறன் படைப்புகளைப் பார்வையிட்டு, டர்னர், வெல்டர், ஹைட்ராலிக் அண்ட் நியூமேட்டிக்ஸ்,  ரோபோட்டிக்ஸ், மேம்பட்ட CNC மற்றும் லேசர் கட்டிங் ஆய்வகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நவீன தொழில்நுட்பப் பயிற்சி வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாகச் செயல்படும் ஃபிட்டர் தொழிற்பிரிவில் பயிலும் மாணவ, மாணவியர்களை முதல்வர் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், ஜப்பானின் EHIME NISSAN நிறுவனத்தில் பணியமர்விற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஜப்பானிய மொழி பயிலும் மாணவர்களை முதல்வர் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார். 

summary

Chief Minister C. Joseph Vijay inaugurated advanced electrical laboratories today (Oct. 28) at 30 Government Industrial Training Institutes (ITIs), established with the support of Schneider Electric India Pvt. Ltd.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments