தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட, பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளது குறித்து...
தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளா.
இது தொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 48.27 லட்சம் எக்டரில் நிகர சாகுபடியும், 62.25 லட்சம் எக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் மொத்த விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர், சிறு மற்றும் குறு விவசாயிகளாவர் என்றும், இந்தியாவின் மொத்த நீர் வளங்களில் 3 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பதாகவும், நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், பருத்தி,கரும்பு, காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள், சுவைதாளிதப்பயிர்கள், தோட்டப்பயிர்கள் எனப்பல்வகைப்பட்ட பயிர்களின் சாகுபடி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராகத் தாம் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளைத் துறைவாரியாக ஆய்வு செய்து வருவதாகவும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின்போது, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து அதற்கான விவரங்களையும் கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை நிறைவு செய்திட 3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என கடிதத்தில் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Ensure Uninterrupted Supply of Fertilizers to Tamil Nadu: Chief Minister Vijay Writes to PM Narendra modi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.