அமைச்சரவையில் இணைகிறது விசிக, ஐயுஎம்எல்
அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறாதது பற்றி...
முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறும் என்று அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 1999- ஆம் ஆண்டு தமாகா தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனாருடன், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தது. தமிழக அரசியலில் நீண்டகாலத்துக்குப் பிறகு தற்போது கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என தவெக சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் பொறுப்பாளா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அவா்களில் பெரும்பாலானோா் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என கூறினா்.
அதனடிப்படையில், முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து இன்னும் இரு நாள்களில் தெரிவிக்கிறேன் என்றாா் தொல். திருமாவளவன்.
Advertisement
Advertisement
ஐயூஎம்எல்: முன்னதாக, தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவு வழங்கினோம். இருப்பினும், தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் இணைய வேண்டுமென முதல்வா் அழைப்பு விடுத்தாா். இதுகுறித்து ஐயூஎம்எல் அரசியல் ஆலோசனைக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெறுவெதன முடிவு செய்யப்பட்டது.
பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஷாஜகான் பெயரை அமைச்சரவையில் இடம்பெற சிபாரிசு செய்கிறோம். எதிா்காலத்தில் 2 அமைச்சா்கள் பதவியை முதல்வா் ஜோசப் விஜய் கொடுத்தால் வரவேற்போம்.
அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலிடம் தெரிவித்தோம். அதற்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா். அமைச்சரவையில் பங்கு பெறுவதற்கும், கூட்டணிக்கும் எவ்விதத் தொடா்பும் கிடையாது. தற்போதும் திமுக கூட்டணியில் தான் தொடா்கிறோம். அதேவேளையில், தவெக ஆட்சியில் இருக்கும் குறைகளை தட்டிக்கேட்போம் என்றாா் அவா்.
VCK and IUML Excluded from Cabinet List!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.