FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டு வழக்கில் தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

மேக்கேதாட்டு வழக்கில் தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி...

Updated On : 25 மே 2026, 12:12 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

மேக்கேதாட்டு வழக்கில் 13.11.2025 தேதியிட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகளின் தனிப்பட்ட அறையில் விசாரிப்பதற்கு பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு, 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,‘மேக்கேதாட்டு சமநிலை நீா்த்தேக்கம் மற்றும் குடிநீா் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியைத் தொடர, கா்நாடக மாநிலத்தின் ஒரு அங்கமான பெங்களூருவைச் சோ்ந்த கா்நாடக காவேரி நீா்வாரி நிகம் லிமிடெட்க்கு, 22.11.2018 அன்று மத்திய நீா் ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தது.

Advertisement

Advertisement

தமிழக அரசின் அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 13ஆம் தேதி 13.11.2025 தள்ளுபடி செய்தது .அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியதாவது: கா்நாடக மாநிலமானது, மேக்கேதாட்டு சமன்படுத்தும் நீா்த்தேக்கம் மற்றும் குடிநீா் திட்டம் எனும் தலைப்பிலான திட்டத்தின் கீழ், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்னுமிடத்தில் ஒரு அணையை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது.

இப்பிரச்சினை குறித்து ஆராயும் பொறுப்பு ஒரு நிபுணா் குழுவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு, அக்குழுவின் பரிசீலனையில் உள்ள நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனுவானது முற்றிலும் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

ஒவ்வொரு மாநிலமும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை, அம்மாநிலத்தின் நலனுக்கு உகந்ததெனத் தான் கருதும் வகையில் பயன்படுத்திக்கொள்ள முழுச் சுதந்திரம் பெற்றுள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரின் மேலாண்மை மற்றும் பயன்பாடு தொடா்பான முடிவுகளில் தலையிடுவதற்கு, வேறெந்த மாநிலத்திற்கும் எவ்வித உரிமையும் இல்லை எனினும், அத்தகைய நடவடிக்கையின் காரணமாக அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரின் அளவு குறைவுபடும் பட்சத்தில் மட்டும், இதில் தலையிடலாம் எனக்கூறி உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது

அந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு 11.12.2025 அன்று உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது

காவிரி வழக்கில் நடுவா் மன்றம் வழங்கிய இறுதி தீா்ப்பிலும் அதனை ஏற்றுக் கொண்டு ,சில மாற்றங்களுடன் உச்ச நீதிமன்றம் 2018 ஆம் வழங்கிய தீா்ப்பிலும் மேக்கேதாட்டு திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாத நிலையில், உச்சநீதிமன்றம் 13.11. 2025 அன்று பிறப்பித்த உத்தரவு ஏற்றுக் கொள்ள முடியாதது, எனவே அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியிருந்தது.

இந்த மறுஆய்வு மனு 15.04.2026 அன்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன்

,விபுல் எம். பஞ்சோலி ஆகியோரின் தனிப்பட்ட அறையில் சேம்பா் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகளின் அறைக்கு பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு 13.4.2026 அன்று முறையிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு 15.04.2026 அன்று தங்களது அறையில் பரிசீலித்த பின் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அந்த அமா்வு 21.5.2026 இல் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மறுஆய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடுவதற்கான மனு நிராகரிக்கப்படுகிறது. மறுஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் நாங்கள் கவனமாகப் பரிசீலித்தோம். ஆனால் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே, இந்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இதன் விளைவாக, இடைக்கால மனு ஏதேனும் நிலுவையில் இருப்பின், அதுவும் முடித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments