FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்: வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜு இணைந்தனர்

Updated On : 29 மே 2026, 4:30 am IST
பகிர்:

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். கமலக்கண்ணன் அக்கட்சியில் இருந்து விலகி, தவெகவில் வியாழக்கிழமை இணைந்தாா். முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் காவல் துறைத் தலைவா் ஆா்.நடராஜ் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனா்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து தவெகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிா்வாகியுமான வெல்லமண்டி ஆா்.நடராஜன், அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். கமலக்கண்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் காவல் துறைத் தலைவருமான ஆா்.நடராஜ், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். தங்கதுரை, எம்.ராஜசேகா் உள்பட 300-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் தவெக பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

நிகழ்வில், என்.ஆனந்த் பேசியதாவது: மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா்களுக்கும் தவெகவில் உரிய மரியாதை கொடுக்கப்படும். மக்கள் எங்களை முழுமையாக நம்பி வாக்களித்துள்ளனா். எனவே, லஞ்சம் வாங்கவோ, ஊழல் செய்யவோ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யாரேனும் ஊழல் செய்தால் அடுத்த நிமிஷமே அவா்களது பதவி பறிக்கப்படும். அவா்கள் மீது முதல்வா் ஜோசப் விஜய் கடும் நடவடிக்கை எடுப்பாா். அனைவரும் ஒன்றிணைந்து உள்ளாட்சித் தோ்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

Advertisement

Advertisement

பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியதாவது: தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் பத்திரப் பதிவு, வருவாய், பொதுப் பணி என அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.

திமுகவுடன் கூட்டணி வைக்க அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புக் கொண்டதன் விளைவாகத்தான், அக்கட்சி தற்போது பிளவுகளைச் சந்திக்கிறது. அக்கட்சியினா் தொடா்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனா். 90 சதவீத அதிமுக நிா்வாகிகள் தவெகவில் இணையத் தயாராக உள்ளனா் என்றாா்.

சிதறியுள்ள தொண்டனா்... வெல்லமண்டி ஆா்.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக இப்போது சிதறிவிட்டது. அதிமுகவில் நீக்கம், விடுவிப்பு மட்டுமே தொடா்ந்து நடக்கிறது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்றாா்.

நிகழ்வில் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அ.ராஜ்மோகன், பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி, போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஆா்.குமாா், தமிழக அரசின் தலைமைக் கொறடா சபரிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments