FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்க: அன்புமணி வலியுறுத்தல்

சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிவுகளை சரி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை குறித்து...

அன்புமணி - எக்ஸ்
பகிர்:

சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிவுகளை சரி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறியிக்கையில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், மோசமான நிர்வாகத்தால் பழமைச் சிறப்புமிக்க கோயில் கட்டமைப்புகள் சீரழிந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், அக்கோயிலை நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை அமைத்திருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு செயல்படுத்தப்படுவதையும், சட்ட நடவடிக்கைகளில் பாதுகாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் கனகசபை மீது பக்தர்கள் ஏறி நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளித்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தில்லை நடராசர் கோயிலை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஆர். சுரேஷ்குமார் ஆகியோரை தலைவர் மற்றும் துணைத் தலைவராகக் கொண்ட 5 பேர் குழுவை அமைத்து ஆணையிட்டிருக்கிறது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

நடராசர் கோயில் நிர்வாகத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகள் வசம் ஒப்படைப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் மிகவும் முக்கியமானவை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2014 ஆம் ஆண்டில் நடராசர் கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, 12 ஆண்டுகளில் பெரும் சீரழிவை சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள நீதிமன்றம், கோயில் வளாகத்திற்குள் தேவையில்லாத கட்டிடங்களை அனுமதியின்றி கட்டியதால், பக்தர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; சட்டவிரோதமான இந்தக் கட்டுமானங்களால் கோயிலின் புராதன கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன; கோயில் வரவு - செலவு கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை; கோயிலின் சொத்துகள் சூறையாட அனுமதிக்கப்பட்டன; வழிபாட்டுத் தலமான நடராசர் ஆலையத்தை உணவு வளாகமாக மாற்றி விட்டனர் என்றும் விமர்சித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் இணைத்துள்ளது.

சிதம்பரம் நடராசர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சிதம்பரம் நடராசர் ஆலயம் குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முன், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்படுத்தப்பட்ட இந்த ஆலயம், அவர்களின் குலதெய்வக் கோயிலாக விளங்கியது. சோழ மன்னர்கள் இந்தக் கோயிலில் முடிசூடிக் கொள்வதை பெருமையாக கருதியுள்ளனர். சிதம்பரம் சில காலம் சோழர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உணர்த்துகின்றன. இப்படியாக சோழப் பேரரசுடன் மட்டுமின்றி, தமிழர்களின் கலை, ஆன்மிகம் மற்றும் பண்பாட்டுச் சின்னமாகவும் திகழும் சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிக்கப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

சிதம்பரம் நடராசர் கோயில் வளாகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்த அனைத்து குளறுபடிகளையும், முறைகேடுகளையும் சரி செய்து, கோயிலை மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தலைமையிலான நிர்வாகக் குழுவுக்கும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்தக் கடமையை நிர்வாகக் குழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் குழுவுக்கு வழங்க வேண்டும்.

அதைவிட முக்கியம் சிதம்பரம் நடராசர் கோயிலை பாதுகாப்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பாதுகாக்க வேண்டியது தான். அதற்காக இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதிட மூத்த வழக்குரைஞர்களை நியமித்து, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

The Madras High Court, expressing serious concern over the increasing irregularities in the administration of the Chidambaram Nataraja Temple and the deterioration of its historic structures due to poor management

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments