புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் இடமாற்றம்!
புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளின் இடங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது குறித்து...
புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளின் இடங்கள் திங்கள்கிழமை (நவ. 2) திடீரென மாற்றப்பட்டுள்ளது
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் அரசு விழாவுக்காக தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட அரங்கை விட்டுவிட்டு, ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கிலேயே விழாவை நடத்திட திடீர் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புதிய பேருந்து நிலையம், நவீன உள் விளையாட்டரங்கம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கவும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை வருகிறார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் காலை 9 மணிக்கு திருச்சி வரும் முதல்வர், சாலை வழியாக புதுக்கோட்டை வந்தடைகிறார்.
அரசு விழாவுக்காக ஆயுதப்படை திடலில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவசர அவசரமாக ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தை ஆயுதப்படை திடலில் இருந்து, ஆட்சியர் அலுவலகத்துக்கே மாற்றுவது என முடிவு செய்யப்பட்டு, அதிகாலையில் அவசர அவசரமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வரின் பாதுகாப்புப் படையினரும், வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ள காவல்துறை உயர் அலுவலர்களும் ஆட்சியர் அலுவலக வளாகத்தை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்தைப் பொருத்தவரை, தொண்டைமான் மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த அரண்மனையாகும். இந்த வளாகம் 100 ஏக்கர் பரபரப்பளவைக் கொண்டிருந்தாலும், கட்டுமானப் பகுதி சிறியதுதான்.
மூன்றாம் தளத்திலுள்ள கூட்ட அரங்கு என்பது 100 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாற்றப்பட்ட இடத்துக்குள் பயனாளிகளை எப்படி அடக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இரு லிப்ட் வசதிகள் இருந்தாலும் அதிகாரிகள், அமைச்சர்கள் சென்று வருவதற்கே போதுமானதாக இருக்கப் போவதில்லை.
இடமாற்றம் என்பதற்கு பாதுகாப்புக் காரணங்கள் மட்டும் காரணம் என காவல்துறையினர் விளக்கமளிக்கின்றனர்.
ஈரோடு
பெருந்துறை வாய்க்கால் மேட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (நவ. 3) முதல்வர் விஜய் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில், காஞ்சிகோயில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளது.
இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார்.
The venues for the events in Pudukkottai and Erode, in which the Chief Minister is set to participate, were suddenly changed on Monday (Nov. 2).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.