FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்வி

அழுகிய வெங்காயத்தை கொள்முதல் செய்து, பின்னர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வருக்கு உதயநிதி கேள்வி...

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடம் (என்.ஏ.எஃப்.இ.டி.) இருந்து 450 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வழங்கிய ஆணையை, வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் தமிழக அரசு ரத்து செய்தது.

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை முனையத்தில் இந்த வெங்காயம் அழுகிய நிலையில் இருந்த புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

Advertisement

Advertisement

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பேசியிருப்பதாவது:

”எம்.எல்.ஏ.க்களை வாங்க தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?

உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.

மகாராஷ்டிரத்தில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை சமாளிக்க, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.

இந்த சர்க்கஸ் ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே பொய்ச் செய்திகளை பரப்பியிருக்கிறது.

அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்.

இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி.

இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?

ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, ஒப்பந்தம் விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை பாலீஷ் போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்?

வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் முதல்வர், இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?” என்று பதிவிட்டுள்ளார்.

summary

Doesn't a Chief Minister who knows how to 'buy' MLAs know how to buy onions? Udhayanidhi asks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.