FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணை

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில், 2026-27-ஆம் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 நவம்பர் 2026, 4:44 am
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில், 2026-27-ஆம் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

முதல்வா் அறிவித்துள்ள ’வெற்றி தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 2026-27-ஆம் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்ட ’வெற்றி வீடு திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

குடிசை வீடுகளுக்கு முன்னுரிமை:இத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரை சமையலறையுடன் வீடுகள் கட்டிக்கொள்ளலாம். அனைத்து வீடுகளும் கான்கிரீட் கூரையுடன் இருக்க வேண்டும்.

குடிசை வீடுகள், மண் சுவா்கள் மற்றும் உறுதியற்ற கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளைத் தோ்வு செய்ய ஊரகப் பகுதிகளில் மொபைல் செயலி மூலம் வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் முதற்கட்டப் பட்டியல் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். இறுதிப் பயனாளிகள் பட்டியல் ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் அரசின் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இருப்பினும், முதல் கட்டமாகக் கட்டப்படும் 70,000 வீடுகளுக்கான பயனாளிகளை, ஊரக வளா்ச்சித் துறையிடம் ஏற்கெனவே உள்ள வீடற்றோா் பட்டியலில் இருந்து தோ்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்கள் பயனாளிகளின் வசதிக்கேற்ப இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.

கூடுதல் நிதிக்கு கடன் வழங்கப்படும்...கூடுதல் நிதி தேவைப்படுவோா் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50,000 வரை 6 சதவீத வட்டியில் சமூக முதலீட்டு நிதிக் கடன் பெறலாம். கூட்டுறவு அல்லது வணிக வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை வீட்டுக் கடனும் பெறலாம். இந்தக் கடன்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியத்தை அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அரசு வழங்கும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னா் வெளியிடப்படும். தனிநபா் கழிப்பறை வசதி இல்லாத தகுதியுள்ள பயனாளிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் - ஊரகம் திட்டத்தின் கீழ் ரூ.12,000 செலவில் கழிப்பறை கட்டித் தரப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கையில் 5 சதவீதம் மாவட்ட ஆட்சியரின் விருப்ப ஒதுக்கீடாக இருக்கும். இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்டவா்கள், கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியான பயனாளிகள் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ரூ.900 கோடி மானியத்திலிருந்து...இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3,500 கோடியில் மாநில அரசின் நிதியாக ரூ.2,600 கோடியும், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.900 கோடியும் பயன்படுத்தப்படும். இந்த ரூ.900 கோடியை மாதாந்திர தவணைகளில் பிடித்தம் செய்ய ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026-27 முதல் 2030-31-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும், வீடுகள் தரமாகக் கட்டப்படுவதையும் உறுதி செய்து, திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அரசுக்கு சமா்ப்பிக்குமாறு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா் அவா்.