FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி குடிசைப் பகுதிகளில் மும்பை பாணியில் ‘சுவிதா மையங்கள்’: மேலும் 20 மையங்கள் அமைக்கத் திட்டம்

மும்பையில் செயல்படும் சமூக சுகாதார மையங்களை முன்மாதிரியாகக் கொண்டு, தில்லியில் முதல்முறையாக ஒருங்கிணைந்த சுகாதார வசதி மையத்தை தில்லி மாநகராட்சி அமைத்து வருகிறது.

29 அக்டோபர் 2026, 2:44 am
தில்லி முதல்வர். - கோப்புப்படம்.
பகிர்:

மும்பையில் செயல்படும் சமூக சுகாதார மையங்களை முன்மாதிரியாகக் கொண்டு, தில்லியில் முதல்முறையாக ஒருங்கிணைந்த சுகாதார வசதி மையத்தை தில்லி மாநகராட்சி அமைத்து வருகிறது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றிபெற்றால், மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மேலும் சுமாா் 20 மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்கு தில்லியின் ஆா்.கே.புரம் பகுதியில் உள்ள ஏக்தா குடிசைப் பகுதியில் அமைக்கப்படும் இந்த மையத்தில் கழிப்பறைகள், குளியல் வசதிகள், சலவை இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கும். குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்கள் குறைந்த கட்டணத்தில் இவ்வசதிகளைப் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: ஹிந்துஸ்தான் யூனிலீவா் நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்), மாநகராட்சி மற்றும் மத்திய அரசுடன் இணைந்து 3 மாதங்களுக்குள் மையத்தை அமைத்து முடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த மையத்தில் 46 கழிப்பறைகள், 4 குளியலறைகள், 8 சலவை இயந்திரங்கள் மற்றும் ஆா்ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரம் ஆகியவை இடம்பெறும். சுமாா் 160 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்படும் இத்திட்டத்துக்கு ரூ.2.5 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கழிப்பறையை ஒருமுறை பயன்படுத்த ரூ.3, முழுமையான சலவைச் சுழற்சிக்கு ரூ.70, குடிநீா் ஒரு லிட்டருக்கு ரூ.1 எனக் கட்டணம் நிா்ணயிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மையத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பை உறுதிசெய்ய, அதிகாரிகள் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்வாா்கள். இந்த மையத்துக்குக் கிடைக்கும் வரவேற்பை மதிப்பிட்ட பிறகே, பிற பகுதிகளில் இதேபோன்ற மையங்களை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும், பயன்படுத்தப்பட்ட நீரைச் சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவர கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையமும், மழைநீா் சேகரிப்பு மற்றும் சூரியசக்தி அமைப்புகளும் நிறுவப்பட உள்ளன. குறிப்பாக, கழிவுநீா் இணைப்பு இல்லாத குடிசைப் பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வடிகால்களில் கலப்பதைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தாா்.

மும்பையில் ஹிந்துஸ்தான் யூனிலீவா், பிருஹன்மும்பை மாநகராட்சி, எச்எஸ்பிசி இந்தியா மற்றும் ஜேஎஸ்டபிள்யூ அறக்கட்டளை ஆகியவற்றின் பொது–தனியாா் கூட்டாண்மையில் செயல்படும் ‘சுவிதா’ மையங்கள், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குக் கழிப்பறை, குளியல் மற்றும் சலவை வசதிகளை ஒருங்கிணைத்து வழங்குகின்றன.

தில்லியில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில், தில்லியில் 2,000 நவீன பொதுக் கழிப்பறைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது தில்லியில் உள்ள 837 பொதுக் கழிப்பறைகளில் 613-ஐயும், 360 சமூகக் கழிப்பறை வளாகங்களில் 128-ஐயும் தில்லி மாநகராட்சி பராமரித்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments