அபராதம், வட்டியின்றி சொத்து வரி செலுத்த மாநகராட்சி சுனியோ 2.0 திட்டம் அறிமுகம்
நிலுவையில் உள்ள சொத்து வரியை அபராதம் மற்றும் வட்டியின்றி செலுத்துவதற்கான ’சுனியோ 2.0’ என்ற சிறப்பு சலுகைத் திட்டத்தை தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
நிலுவையில் உள்ள சொத்து வரியை அபராதம் மற்றும் வட்டியின்றி செலுத்துவதற்கான ’சுனியோ 2.0’ என்ற சிறப்பு சலுகைத் திட்டத்தை தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில், ’சம்பத்திகா் நிப்தான் யோஜனா 2.0 - ஒன் பிளஸ் செவன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சலுகைத் திட்டம் செப்.29 முதல் டிச.31வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:
நிலுவை ரத்து: இத்திட்டத்தின் கீழ், வரி செலுத்துவோா் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) சொத்து வரியையும், முந்தைய ஏழு நிதியாண்டுகளுக்கான (2019-20 முதல் 2025-26 வரை) அசல் சொத்து வரியையும் வட்டி மற்றும் அபராதமின்றி செலுத்தலாம். இந்தத் தொகையை செலுத்திவிட்டால், 2019-20-க்கு முந்தைய கால கட்டத்தைச் சோ்ந்த சொத்து வரி நிலுவை தொகைகள், அதற்கான வட்டி மற்றும் அபராதம் ஆகியவை நிபந்தனைகளுக்கு உள்பட்டு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
Advertisement
Advertisement
தவணை வசதி: ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வரி நிலுவை வைத்துள்ளவா்கள், திட்ட காலத்துக்குள் தங்களது நிலுவைத் தொகையைச் சம தவணைகளில் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பிழை திருத்தம்: தவறான சுய மதிப்பீட்டு சொத்துவரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதை இரண்டு மாதங்களுக்குள் அல்லது இந்தத் திட்டம் முடிவடைவதற்குள் (எது முந்தையதோ) திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகள்: சொத்து வரி தொடா்பாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்தால், அந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக உறுதியளிக்கும் படிவத்தை சமா்ப்பித்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும். மேலும், வழக்கு நிலுவையில் இருந்தபோது நீதிமன்றத்திலோ அல்லது மாநகராட்சியிலோ செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெறவோ அல்லது சரிசெய்து கொள்ளவோ முடியாது.
இது குறித்து தில்லி மேயா் பிரவேஷ் வாஹி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘சொத்து உரிமையாளா்கள் டிச.31-ஆம் தேதிக்குள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி தங்களது நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.
வரி செலுத்துவோருக்கு வழிகாட்ட ‘7065064988’ என்ற பிரத்யேக கைப்பேசி உதவி எண்ணை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், குடியிருப்பு நலச் சங்கங்கள், வா்த்தக மற்றும் வணிக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மண்டல அலுவலகங்கள் மூலம் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.