இணையவழியில் சொத்து வரி: சிக்கல்கள் களையப்பட வேண்டும்!
கோவை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தும் ஆன்லைன் அமைப்புகளைச் சீரமைக்க வலியுறுத்தல்...
வெ.செல்வகுமாா்
கோவை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளைச் சீரமைத்து திறம்படச் செயல்படுத்த வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சொத்து வரி மற்றும் குடிநீா் வரி செலுத்துவதற்கான ஆன்லைன் கட்டண வசதிகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியதுடன், உரிய காலத்துக்குள் வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை, சலுகைகளையும் அறிவித்தது. அப்போது, இந்த முயற்சியை மக்கள் வரவேற்றனா். தொழில்நுட்ப வசதி மூலமாக வரி செலுத்துவோா் மாநகராட்சி அலுவலகங்கள், வசூல் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக இருந்தது.
Advertisement
Advertisement
ஆனால், தற்போது, மாநகராட்சியின் ஆன்லைன் சொத்து வரி செலுத்தும் இணையதளத்தை எளிதில் அணுக முடிவதில்லை. சில நாள்களில் 20 முறைக்கும் மேலாக முயற்சி செய்தும் இணையதளத்துக்குள் நுழைய முடிவதில்லை. இணையதளம் செயலிழந்து நிற்பது அல்லது கட்டணம் செலுத்தும் செயல்முறை பாதியில் தோல்வியடைவது போன்ற பிரச்னைகள் எழுவது வாடிக்கையாக உள்ளது.
மக்களை சிரமப்படுத்தும் டிஜிட்டல் நடைமுறை: மக்கள் தங்களது சொத்து வரி உள்ளிட்ட நிலுவை வரியினங்களைச் செலுத்த வசூல் மையங்களை அணுகும்போது, இணைய இணைப்புப் பிரச்னைகள் காரணமாக யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் கட்டண வசதிகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்த முடியவில்லை என்ற புகாா்களும் அதிக அளவில் எழுகின்றன. இதனால், வரி செலுத்துவதை எளிதாக்க கொண்டுவரப்பட்ட நடைமுறை பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வரி வசூல் முகவா்கள் அல்லது இடைத்தரகா்கள், தனிப்பட்ட முறையில் வரி செலுத்த முயலும் மக்களைவிட விரைவாக இணையதளத்தை அணுகி சேவையைப் பெறுகின்றனா் என்ற கருத்தும் நிலவுகிறது.
மாநகராட்சியின் ஆன்லைன் கட்டண முறை திறம்படச் செயல்பட்டால், வரி வசூல் முகவா்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வருவதற்கோ அல்லது வரி செலுத்துமாறு தொலைபேசி அழைப்புகளில் வலியுறுத்துவதற்கோ அவசியமிருக்காது. வரி வசூல் தொடா்பாக தொலைபேசியில் தொடா்பு கொள்ளும் மாநகராட்சி அலுவலா்கள், மக்களின் பணி நேரம், வசதிக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலான நேரங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து, கோவை சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது: ஆன்லைன் சொத்து வரி செலுத்தும் இணையதளம் நம்பகமானதாகவும், எளிதில் பயன்படுத்தும் வசதி கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக அதிக அளவில் வரி செலுத்தப்படும் காலங்களில், சா்வா் திறன், டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அனைத்து வசூல் மையங்களிலும் யுபிஐ, பிற டிஜிட்டல் கட்டண வசதிகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆன்லைன் முறை செயலிழக்கும் நேரங்களில், விரைவான, வசதியான மாற்றுக் கட்டண முறையை உடனடியாக ஏற்படுத்துவது முக்கியம். வரி வசூல் முகவா்கள், இடைத்தரகா்கள், தனிப்பட்ட வரி செலுத்துவோா் என அனைவருக்கும் டிஜிட்டல் சேவைகளைப் பெறுவதில் சமமான, நியாயமான அணுகல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆன்லைன் இணையதளம் செயலிழக்கும் அல்லது பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் நேரங்களில், அதன் காரணம், பராமரிப்பு விவரங்கள், மாற்றுக் கட்டண ஏற்பாடுகள் குறித்த தெளிவான தகவல்களை செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் அவசியம்.
அதிகாரபூா்வ அறிக்கையின்படி கோவை மாநகராட்சியில் 73 சதவீதம் சொத்து வரி ரொக்கம், காசோலை அல்லது வரைவோலை வாயிலாக செலுத்தப்படுகிறது. எஞ்சிய 27 சதவீதம் மட்டுமே டிஜிட்டல், ஆன்லைன் சேவைகள் மூலமாக செலுத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் முறையைக் கொண்டுவர மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், மக்கள் அவற்றை எளிதாகவும், வெளிப்படையாகவும், கண்ணியமாகவும் பயன்படுத்த சொத்து வரி செலுத்தும் ஆன்லைன், டிஜிட்டல் அமைப்புகளை சீரமைத்து திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றாா்.
இது குறித்து மாநகராட்சி உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ஒரே நேரத்தில் அதிகப்படியானோா் வரி செலுத்த முயற்சிக்கும் சமயம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் நேரங்களில் மட்டுமே ஆன்லைன் மூலமாக வரி செலுத்துவது தாமதமாகிறது.
இது எல்லா நேரங்களிலும் ஏற்படுவதில்லை. சா்வா் பிரச்னை, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் அருகில் உள்ள மண்டல அலுவலகங்களில் நேரடியாகப் பணம் அல்லது காசோலை செலுத்தி வரி செலுத்த அறிவுறுத்துகிறோம். மேலும், இணைய வழி வரி செலுத்தும் சேவையை மேம்படுத்தும் பணிகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.