நிகர நேரடி வரி வசூல் 12% உயா்வு
நிகர நேரடி வரி வசூல் 11.76 சதவீதம் அதிகரித்து, சுமாா் ரூ.14.42 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டில் கடந்த நவ. 10 நிலவரப்படி, நிகர நேரடி வரி வசூல் 11.76 சதவீதம் அதிகரித்து, சுமாா் ரூ.14.42 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரூ.26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூலை எட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயித்துள்ளது. தற்போதைய வசூல் நிலவரப்படி, இலக்கில் 53 சதவீதம் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் நிகர பெருநிறுவன வரி வசூல் 18 சதவீத வளா்ச்சியுடன் ரூ.6.32 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதேபோல, தனிநபா்கள் மற்றும் ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் உள்ளிட்டோா் செலுத்தும் பெருநிறுவனங்கள் அல்லாத நிகர வரி வசூல் 5.3 சதவீதம் அதிகரித்து, சுமாா் ரூ.7.56 லட்சம் கோடியாகவும்; பத்திரப் பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) வசூல் 52 சதவீதம் அதிகரித்து, ரூ.54,078 கோடியாகவும் உள்ளது.
Advertisement
Advertisement
ரூ.3.08 லட்சம் கோடி ரீஃபண்ட்: மதிப்பீட்டு காலத்தில் ரூ.3.08 லட்சம் கோடி மதிப்பிலான வரித் தொகையானது, வரி செலுத்துவோருக்குத் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 26 சதவீதம் அதிகமாகும்.
மொத்த வரி வசூல் நிலவரம்: வரித் தொகையை திருப்பியளித்ததற்கு முந்தைய மொத்த வரி வசூல் அடிப்படையில், நேரடி வரி வசூல் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.17.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பெருநிறுவன வரி ரூ.8.01 லட்சம் கோடி, பெருநிறுவனங்கள் அல்லாத வரி ரூ.8.94 லட்சம் கோடி, பத்திரப் பரிவா்த்தனை வரி ரூ.54,078 கோடி அடங்கும்.
ஆரோக்கியமான வா்த்தகச் செயல்பாடு, வலுவான ஜிடிபி வளா்ச்சி மற்றும் சீரான வரிவிதிப்பு முறைகளை இந்த வரி வசூல் புள்ளிவிவரங்கள் பிரதிபலிப்பதாக வரி பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.