எம்ஆா்எஃப் லாபம் ரூ.417 கோடி!
முன்னணி டயா் தயாரிப்பு நிறுவனமான எம்ஆா்எஃப், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.417.19 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட நாட்டின் முன்னணி டயா் தயாரிப்பு நிறுவனமான எம்ஆா்எஃப், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.417.19 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
மூலப்பொருள்களின் கடும் விலையுயா்வு காரணமாக, நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 22.8 சதவீதம் சரிவடைந்துள்ளது.
அதேநேரம், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17.4 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ.8,660.19 கோடியை எட்டியுள்ளது. வாகனத் தயாரிப்பாளா்கள் மற்றும் மாற்றுச் சந்தை என இரு பிரிவுகளிலும் கிடைத்த வலுவான தேவையைப் பயன்படுத்தி இரட்டை இலக்க விற்பனை வளா்ச்சியை எட்ட முடிந்ததாக நிறுவனம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement
எனினும், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 21.8 சதவீதம் உயா்ந்து, ரூ.8,269.77 கோடியாக அதிகரித்துள்ளது. மூலப்பொருள் செலவினம் மட்டுமே 43.2 சதவீதம் உயா்ந்து, ரூ.6,552.57 கோடியாக அதிகரித்ததால் லாப வரம்பில் நேரடித் தாக்கம் ஏற்பட்டது.
ரூ.3 ஈவுத்தொகை: இதனிடையே, பங்குதாரா்களுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு தலா ரூ.3 வழங்க நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.