வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகை உயா்த்தி அறிவிப்பு: அரசாணை வெளியீடு
வனவிலங்குகளால் விவசாயிகள், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வனவிலங்குகளால் விவசாயிகள், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த செப். 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் வனத் துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், இந்த இழப்பீட்டுத் தொகைகள் உயா்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணை: வனவிலங்குகள் தாக்கி மனிதா்களுக்கு கடுமையான காயம் அல்லது பகுதி உடல் ஊனம் ஏற்பட்டால், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உடல் செயலிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இதுவரை இத்தகைய பாதிப்புகளுக்கு ரூ.59,100 வழங்கப்பட்டு வந்தது. சிறிய காயங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், இனி அதிகபட்சமாக ரூ.20,000 வழங்கப்படும்.
வனவிலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்தால், இதுவரை ஏக்கருக்கு ரூ.25,000 அல்லது உண்மையான சேத மதிப்பீட்டுத் தொகை, இதில் எது குறைவோ அந்தத் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது ஏக்கருக்கு ரூ.40,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், சேதமடைந்த நிலத்தின் அளவு மற்றும் உண்மையான சேத மதிப்பீட்டின் அடிப்படையில், இவற்றில் குறைவான தொகையே இழப்பீடாக வழங்கப்படும்.
Advertisement
Advertisement
தென்னை மரங்கள் சேதமடைந்தால், மரத்தின் வயதுக்கு ஏற்ப இழப்பீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு வரையிலான தென்னங்கன்றுகளுக்கு ரூ.500, ஒன்று முதல் நான்கு வயதுடைய மரங்களுக்கு ரூ.1,000, நான்கு வயதுக்கு மேற்பட்ட காய்க்கும் மரங்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும். இதற்கு முன்பு ஒரு மரத்துக்கு ரூ.500 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், வனவிலங்குகளால் சேதமடையும் ஒவ்வொரு வாழைச் செடிக்கும் இனி ரூ.250 இழப்பீடு வழங்கப்படும்.
வனவிலங்குகளால் வீடுகள் சேதமடைந்தாலும் இழப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. முழுமையாக அல்லது கடுமையாகச் சேதமடையும் கான்கிரீட் வீடுகளுக்கு இதுவரை ரூ.95,100 வழங்கப்பட்ட நிலையில், இனி அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும். உண்மையான சேத மதிப்பீட்டுத் தொகை இதைவிடக் குறைவாக இருந்தால், அந்தத் தொகையே வழங்கப்படும்.
முழுமையாகச் சேதமடைந்த ஓலை மற்றும் மண் வீடுகளுக்கு இதுவரை ரூ.10,000 மும், கடுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5,000 மும் வழங்கப்பட்டு வந்தது. இனி இத்தகைய வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 வழங்கப்படும். வீட்டின் கட்டுமானப் பொருள்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும் உண்மையான சேதத் தொகையே இறுதி இழப்பீடாக நிா்ணயிக்கப்படும். பகுதியளவு சேதமடைந்த கான்கிரீட், மண் உள்ளிட்ட அனைத்து வகை வீடுகளுக்கும் இதுவரை ரூ.5,200 வழங்கப்பட்ட நிலையில், இனி அதிகபட்சமாக ரூ.10,000 வழங்கப்படும்.
மேலும், வனவிலங்குகளால் உயிரிழக்கும் பால் தரும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.30,000 இழப்பீடு, தற்போது ரூ.40,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, மனிதா்கள் மற்றும் வனவிலங்குகள் இடையிலான மோதல்களில் மனித உயிரிழப்பு அல்லது நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக 2024 ஆம் ஆண்டு உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், வனச்சட்டங்கள் மற்றும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டங்களின் விதிகளை மீறிச் செயல்படுபவா்களுக்கு இந்த இழப்பீடு பொருந்தாது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.