சண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு
கமல்ஹாசனின் சண்டியர் படம் விவகாரத்தில் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி..
சண்டியர் படத்தை கமல்ஹாசன் வெளியிடக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று அவர் அளித்த பேட்டியில்: "ரத்தம் சொட்ட சொட்ட ஒரு விளம்பரத்தை வெளியிட்டு 'சண்டியர்' படம் குறித்து கமல் அறிவித்துள்ளார். பிறந்த நாளில் 'பழிக்கு பழி' வாங்கும் வகையில் கமல் ஆரம்பித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்துள்ளார். கமல்ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்.
எம்பியாக உள்ள கமல், சாதி மற்றும் மதம் சார்ந்து செயல்படக் கூடாது. தான் எடுத்த உறுதிமொழிக்கு மாறாக அவர் செயல்படுகிறார். 'சண்டியர்' படத்தை கமல் எடுக்கவும் முடியாது, அதைத் தமிழ்நாட்டில் திரையிடவும் முடியாது. யாரோ சிலரின் தூண்டுதலின் பே பேரில்தான் சண்டியர் படத்தை அவர் அறிவித்துள்ளார். அந்தப் படத்தை அவர் எடுக்கக் கூடாது.
Advertisement
Advertisement
இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் கமல் உள்ளார். உள்நோக்கத்துடனேயே அவர் அனைத்து விஷயங்களையும் செய்கிறார். கமல் சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு பொறுப்பற்ற நடிகர். கமல்ஹாசன் ஏற்கனவே நடித்த 'தேவர் மகன்' திரைப்படத்தால் தென் தமிழகத்தில் இன்றும் அமைதியின்மை நிலவுகிறது.
சண்டியர் படம் வெளிவந்தால் கடந்த காலங்களை விட தற்போது நிலைமை மேலும் மோசமாகும். எனவே 'சண்டியர்' என்ற தலைப்பிற்குத் திரைத்துறையினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.