கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள்!
பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி திருநாளை முன்னிட்டு இந்தாண்டு பட்டாசு வெடிபொருள்கள் சந்தையில் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் செய்தியாளர்களிடமிருந்து தகவல் வரப்பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இதுபோன்று வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கும்பொழுது தலை, முகம், கைகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்படுவதுடன், விரல்கள் சிதைவடைதல், கண் பார்வை பாதிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக குழந்தைகளை எக்காரணம் கொண்டும் இதுபோன்ற பட்டாசுகளை பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்ககூடாது.
விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, அதிக வெடிப்புத் திறன் கொண்ட பட்டாசுகள், வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் மற்றும் ராக்கெட் உள்ளிட்ட ஆபத்தான பட்டாசுகளை ஒருபோதும் கையில் பிடித்து வெடிக்கக் கூடாது.
தற்போது சந்தையில் கிடைக்கும் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, பட்டாசுகளை எப்போதும் தரையில் வைத்து, பாதுகாப்பான தூரத்தில் நின்று மட்டுமே வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்கக் கூடாது.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடித்து மகிழுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பட்டாசு வெடிக்கும் இடத்தில் பாதுகாப்பு கருதி வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பட்டாசு விபத்துகள் இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.