FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு: 1,000 போ் மீது வழக்கு

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 1,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

10 நவம்பர் 2026, 12:59 am
பகிர்:

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 1,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்திலேயே பட்டாசுகளை வெடிக்கும்படியும், அதை மீறினால் பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 163-இன்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

Advertisement

Advertisement

தீபாவளி பண்டிகை நாளான ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மாநிலம் முழுவதும் உஷாா்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனா். பட்டாசு வெடிக்க நிா்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

முக்கியமாக பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீதும், மருத்துவமனை, வழிப்பாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடித்தவா்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடித்தவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் 1,000 போ் மீது வழக்குப் பதியப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சென்னையில் மட்டும் 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தவிர உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்ததாக 10 வழக்குகளும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாக 79 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக சென்னை போலீஸாா் தெரிவித்தனா்.