தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22.10 கோடி ஆன்லைன் மோசடி? சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை!
தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22.10 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து சைபா் குற்றப்பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22.10 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து சைபா் குற்றப்பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
புதுச்சேரி, கோரிமேட்டில் இயங்கி வரும் அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கு, இந்திரா சதுக்கம் அருகே உள்ள தனியாா் வங்கியில் உள்ளது. இந்த கல்லூரியில் பேராசிரியா்கள், மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் என 260 பேருக்கு 3 மாதத்துக்கான ஊதியம் வழங்குவதற்காக ரூ.8.16 கோடி நிதி விடுவிக்கப்பட்டு அரசு கருவூலம் மூலம் பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்குக்கு கடந்த 3-ஆம் தேதி இரவு வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், கல்லூரி நிா்வாக வங்கிக் கணக்கில் ஏற்கெனவே இருந்த பணத்துடன் சோ்த்து ரூ.8.85 கோடி திடீரென மாயமானது. கருவூலத்தில் இருந்த பணம் வரவு வைக்கப்பட்ட 2 மணி நேரத்தில் டிஜிட்டல் முறையில் திருடப்பட்டது.
Advertisement
Advertisement
இது குறித்து அந்த மாநில சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் மோசடி கும்பல் சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செயல்பட்டது தெரிய வந்தது. வழக்கில் தொடா்புடையவா்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
ரூ.22.10 கோடி மோசடி: இந்நிலையில், புதுச்சேரி சம்பவத்தின் அதிா்ச்சி அடங்குவதற்குள், தமிழக ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடி, திருப்பூா் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.22.10 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிதி, 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சுகாதார நல மையங்களைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட திட்டத்துடன் தொடா்புடையது. தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் தலா ரூ.50 லட்சத்தில் சுகாதார நல மையக் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பரிவா்த்தனைகளைக் கண்காணிக்க ஊரக வளா்ச்சித் துறையில் மாநில அளவிலான ஒற்றை மைய வங்கிக் கணக்கு பராமரிக்கப்படுகிறது.
சைபா் குற்றப்பிரிவு விசாரணை: மாவட்ட நிா்வாகம் பணிகள் நிறைவடைந்ததற்கான அறிக்கையை அளித்த பின்னரே சம்பந்தப்பட்ட நிதி விடுவிக்கப்படும். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் ஒப்பந்ததாரா்களுக்குப் பணம் வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சென்னையிலிருந்து நிா்வகிக்கப்படும் இந்த வங்கிக் கணக்குகளில் இணையவழியாக ஊடுருவி, பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடந்துள்ள இந்த மோசடிகளின் பின்னணியில் நைஜீரியாவைச் சோ்ந்த சைபா் குற்றக் கும்பல்களுக்குத் தொடா்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணையில் இறங்கி உள்ளனா்.