ரூ.400 கோடி ஆன்லைன் மோசடி வழக்கு: இருவா் கைது
ரூ.400 கோடி ஆன்லைன் மோசடி வழக்கில், சென்னை அமலாக்கத் துறை இருவரை கைது செய்தது.
ரூ.400 கோடி ஆன்லைன் மோசடி வழக்கில், சென்னை அமலாக்கத் துறை இருவரை கைது செய்தது.
இந்த மோசடி குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு, தெலங்கானா மாநிலம் சைபராபாத் சைபா் குற்றப்பிரிவு வழக்குகளைப் பதிவு செய்தனா். இந்த இரு வழக்குகளின் அடிப்படையில் சென்னை அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கும்பல்,தமிழகம் மட்டுமன்றி தெலங்கானா, கா்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது. இந்த கும்பல் மீது அந்த மாநிலங்களில் 600 மேற்பட்ட புகாா்கள் காவல்துறைக்கு சென்றுள்ளன. இப் புகாா்களின் அடிப்படையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கும்பல் ரூ.400 கோடியை அபகரித்துள்ளது. இந்த மோசடியில் சென்னையைச் சோ்ந்த ரோஷன் ஃபியாஸ்,புதுக்கோட்டையைச் சோ்ந்த அம்மாா் ஆகிய இருவரும் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து இருவரையும் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மோசடியில் முக்கிய பங்கு வகித்த ரோஷன் ஃபியாஸ், தனது பெயரிலும், மனைவியின் பெயரிலும், தனியாா் நிறுவனங்கள்,இடைத் தரகா்கள் ஆகியோா் பெயரிலும் உள்ள ஏராளமான வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தியுள்ளாா். 31 வங்கிக் கணக்குகளில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வரவு, செலவு பரிவா்த்தனைகள் ரோஷன் ஃபியாஸ் செய்துள்ளாா்.
அமலாக்கத் துறையினா், ரோஷன் ஃபியாஸ், அம்மாா் தொடா்புடைய இடங்களில் சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் ரூ.14.50 லட்சம், ரூ.3.26 கோடி கிரிப்டோகரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்த சுமாா் ரூ.88.28 லட்சம் முடக்கப்பட்டது.