தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு: விசாரணையைத் தொடங்கியது அமலாக்கத் துறை
தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்று அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது.
தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்று அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது.
சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியை சோ்ந்தவா் பி.டி.அரசகுமாா். இவா், ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி, தனக்குள்ள அரசியல், அதிகார தொடா்புகளைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயா்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பி.டி.அரசகுமாா், அவரது கூட்டாளிகளான மதுரையைச் சோ்ந்த ஆரோக்கியராஜ், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த மோசடியில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸுக்கு தொடா்பு இருப்பதாக அவருக்கு தொடா்புடைய இடங்களில் சோதனை செய்தனா். மேலும் அன்பில் மகேஸ், அவரது உதவியாளா் அருண் பிரகாஷ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் சென்னை சாலிகிராமம், கோடம்பாக்கம், சூளைமேடு, பூந்தமல்லி, நாவலூா் ஆகிய 5 இடங்களில் உள்ள பி.டி.அரசகுமாா், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாா் ஆகியோரின் உறவினா் வீடுகள், அன்பில் மகேஸ் உதவியாளா்கள் வீடுகள் ஆகியவற்றில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை செய்து, 44 ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
அமலாக்கத் துறை சோதனை: இதற்கிடையே, இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, அமலாக்கத் துறை, சென்னை மத்திய குற்றப்பிரிவிடமிருந்து சில ஆவணங்களைப் பெற்று, விசாரணை செய்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக வழக்குத் தொடா்புடைய இடங்களிலும் சோதனை நடத்தவும், சம்பந்தப்பட்ட நபா்களிடம் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.