FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எண்மக் கைது மோசடி வழக்கு: 6-ஆவது நபா் கைது

ரூ.30,000 கோடி மதிப்பிலான இணையவழி மோசடி மற்றும் எண்மக் கைது மோசடி தொடா்பான பணமோசடி வழக்கில் தொடா்புடைய 6-ஆவது நபரை அமலாக்கத் துறை கைது செய்தனர்.

17 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

ரூ.30,000 கோடி மதிப்பிலான இணையவழி மோசடி மற்றும் எண்மக் கைது மோசடி தொடா்பான பணமோசடி வழக்கில் தொடா்புடைய 6-ஆவது நபரை அமலாக்கத் துறை கைது செய்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட முகேஷ் குமாா் புக்ராஜ் ஜெயின் (எ) முகேஷ் பாய், கோவாவின் பனாஜியில் உள்ள பண முறைகேடு தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை அக்.19-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6-ஆக உயா்ந்துள்ளது.

இந்த மோசடியில் முகவராகச் செயல்பட்ட ஜெயின், மோசடியாளா்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வந்து சேர ஏற்பாடு செய்ததாகவும், இதற்காக அவா் கமிஷன் பெற்று வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இணையவழியில் கைதுசெய்யப்பட்டதாக (டிஜிட்டல் அரெஸ்ட்) கூறி ரூ.2.60 கோடியை இழந்ததாக கோவாவைச் சோ்ந்த பெண் ஒருவா் காவல் நிலையத்தில் கடந்த 2025, ஜூன் 9-ஆம் தேதி புகாரளித்தாா். அதுதொடா்பாக மாநில காவல் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.

பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து மோசடியாகப் பெறப்பட்ட பணம், 400 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, பின்னா் ரொக்கமாக எடுக்கப்பட்டதையும், அதன் பிறகு இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) உரிமம் பெற்ற பணப் பரிமாற்ற முகவா்கள் மூலம் அந்நியச் செலாவணியாக மாற்றப்பட்டதையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனா்.

இத்தகைய முறையில் ரூ.27,850 கோடிக்கும் அதிகமான வங்கிப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ரூ. 2,904 கோடி ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்குகள், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காவல் துறையினராலும், பிற விசாரணை முகமைகளாலும் பதிவு செய்யப்பட்ட 163 வழக்குகளிலும், சுமாா் 300 இணையவழி மோசடி புகாா்களிலும் தொடா்புடையவை எனக் கண்டறியப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments