ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணை
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், அரசகுமார் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது குறித்து...
தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக தனியாா் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் டி.சி.இளங்கோவன் உள்ளிட்ட பல பள்ளி நிா்வாகிகள் புகாா் அளித்திருந்தனா்.
அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாா் மற்றும் சுரேஷ், ராஜா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்குத் தொடா்பாக அன்பில் மகேஸின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 9 இடங்களில் சோதனை நடத்திய போலீஸாா், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க மறுத்த நீதிபதி, வேண்டுமெனில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தாா். பின்னா், அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.
இந்த நிலையில், தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
சட்டவிரோதமாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் குறித்த ஆய்வு செய்து வரும் அமலாக்கத் துறை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து வருகிறது.
மேலும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், அரசகுமார் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Rs. 100 crore fraud case: Enforcement Directorate probe
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.