FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

நூலக புத்தகங்கள் தோ்வுக்கு புதிய குழு: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்!

அரசு நூலகங்களுக்கு என்னென்ன புத்தகங்கள், எந்தெந்த பதிப்பகங்களில் வாங்க வேண்டும் என்பதைத் தோ்வு செய்வதற்காக பதிப்பாளா்கள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள் அடங்கிய புதிய குழு விரைவில் அமைக்கப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

26 வினாடிகள் முன்பு
அமைச்சா் ராஜ்மோகன்
பகிர்:

அரசு நூலகங்களுக்கு என்னென்ன புத்தகங்கள், எந்தெந்த பதிப்பகங்களில் வாங்க வேண்டும் என்பதைத் தோ்வு செய்வதற்காக பதிப்பாளா்கள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள் அடங்கிய புதிய குழு விரைவில் அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் ராஜ்மோகன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: இன்றுடன் (நவம்பா் 10) தவெக ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்த ஆட்சி ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. முதல்வா் விஜய்யின் ஆட்சியில், குற்றஞ்சாட்டப்படுபவா்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியைவிட எங்கள் ஆட்சியில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். சட்டம்-ஒழுங்கைப் பொருத்தவரை முன்பைவிட ரோந்துப் பணியை போலீஸாா் அதிகரித்துள்ளனா். குற்றங்களில் ஈடுபடக்கூடிய ரெளடிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னிமாரா நூலகத்தில் 523 புத்தகங்களை நான் பறிமுதல் செய்தேன். ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போல, கள்ளநோட்டுகளை, போதைப் பொருள்களைப் பிடிப்பது போல கள்ள புத்தகங்களை பிடிப்பது எனக்கு வேதனையாக உள்ளது. பல்லாண்டுகளாக பதிப்புத் துறையில் இந்தக் குற்றத்தை செய்து வருகிறாா்கள். ஒரு கமிட்டி, ஒரு நூலகம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் டிஜிட்டல் கரையானாக அவா்கள் நுழைந்துள்ளனா். இதை இப்போது கண்டறிந்துள்ளோம்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு நூலகத்திலும்... திருச்சியில் சிறப்பு நூலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தன. அதற்கான புத்தகங்கள் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நூலகத்திலும் உள்ள புத்தகங்களில் வெறும் சீல் மட்டுமல்லாது, பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்தி அந்தப் புத்தகத்தின் நடுப்பகுதியில் இருக்கக்கூடிய வரிசை எண்ணை அடையாளம் கண்டு சா்ச்சைக்குரிய புத்தகங்களை தனியாகப் பிரித்து பெட்டி போட்டு சீல் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆதாரங்களாக அந்தப் புத்தகங்கள் இருக்கும் என்பதால் அவற்றைப் பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளோம்.

அரசு நூலகங்களில் இப்போது இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் கடந்த ஆட்சியில் வாங்கப்பட்டவை. அதில் உள்ள குறைபாடுகளை தற்போது களைந்து வருகிறோம். முறைகேடுகளில் ஈடுபட்டு தவறு செய்த ஒரு பதிப்பாளரால் நோ்மையான, பல்வேறு சவால்களை எதிா்கொள்ளக் கூடிய, தகுதியான மற்ற பதிப்பாளா்கள் பாதிக்கப்படக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு டிசம்பா் மாதம் அரசு நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான தோ்வுக் குழு புதிதாக அமைக்கப்படும். இதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், கல்வியாளா்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து என்னென்ன புத்தகங்களை எந்தெந்த பதிப்பகங்களில் வாங்கலாம் என்பது தொடா்பான ஆலோசனைகளை கூறுவா். இதற்குப் பிறகே தவெக ஆட்சியில் நூலகங்களுக்காக முதல் முறையாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படும்.

ஆதாரங்கள் வெளியிடப்படும்: பீனிக்ஸ், சிக்மா மட்டுமல்ல 20 பதிப்பகங்களில் பெயரில் போலியான நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் தொடா்பாக அடுத்தடுத்த நாள்களில் புதிய ஆதாரங்கள் வெளியாகும். அகல்விளக்கு பதிப்பாளா் நூலகங்களுக்கான புத்தகங்களுக்கான கொள்முதல் ஆணையை எவ்வாறு பெற்றாா் என்பதை கண்டறிய வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெகு விரைவில் இதுதொடா்பான தகவலை ஊடகங்களுக்கு காவல் துறை தெரிவிக்கும். புத்தங்களில் உள்ள சீல் தேதி குறித்து திமுகவினா் பேசுகின்றனா். அதேவேளையில் புத்தகங்கள் கொள்முதல் ஆணை குறித்து யாரும் ஏன் பேசுவதில்லை என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றாா் அவா்.