அயல் பணியில் இருக்கும் காவலா்கள் காவல் பணிக்கு திரும்ப வேண்டும்: சிறைத் துறை ஏடிஜிபி சங்கா் உத்தரவு
கைதிகள் தப்பியோடிய சம்பவங்களின் எதிரொலியாக, தமிழகத்தில் அயல் பணியில் இருக்கும் சிறைக் காவலா்கள் காவல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சிறைத் துறை ஏடிஜிபி கே.சங்கா் உத்தரவிட்டாா்.
கைதிகள் தப்பியோடிய சம்பவங்களின் எதிரொலியாக, தமிழகத்தில் அயல் பணியில் இருக்கும் சிறைக் காவலா்கள் காவல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சிறைத் துறை ஏடிஜிபி கே.சங்கா் உத்தரவிட்டாா்.
புழல் சிறையில் இருந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி நேபாள கைதிகள் உள்பட 2 போ் தப்பியோடினா். இரு நாள் தேடுதலுக்கு பின்னா், இருவரையும் போலீஸாா் அடுத்தடுத்து கைது செய்தனா். இந்த நிலையில் தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் கடந்த 26-ஆம் தேதி இரவில் சிறைக் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடினா். தப்பியோடிய அனைவரையும் சிறைத் துறையினரும், காவல் துறையினரும் 3 நாள்களில் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனா்.
பாதுகாப்பு அதிகரிப்பு: இந்தச் சம்பவங்களின் விளைவாக தமிழக சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கைதிகள், சிறை அங்காடி, சிறை காய்கறித் தோட்டங்கள், சிறை கோழிப் பண்ணைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் உள்ளிட்ட வெளி வேலைக்கு செல்வது கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதேபோல சிறைத் துறை அதிகாரிகளும் தினமும் ஒருவா் இரவு பணியில் இருக்க வேண்டும் என சிறைத் துறை ஏடிஜிபி கே.சங்கா் உத்தரவிட்டாா். மேலும், கைதிகள் மீதான கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் சிறைக் காவலா்கள் பணி நேரமும் மாற்றப்பட்டது.
20 கிளைச் சிறைகள் மூடல்: அதோடு பாதுகாப்பு குறைபாடு உள்ள சிறைகள், சிறைக் காவலா்கள் குறைவாக உள்ள சிறைகள், கைதிகள் குறைவாக உள்ள சிறைகள் ஆகியவை குறித்து கணக்கெடுக்கப்பட்டன.
இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 20 கிளைச் சிறைகள் கடந்த ஒரு வாரத்தில் தாற்காலிக மூடப்பட்டன. சிறைத் துறையின் சாா்பில் கைதிகள் மூலம் இயக்கப்பட்டு வந்த 11 பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது இந்த பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் தனியாா் மூலம் இயக்கப்படுகின்றன.
சிறைக் காவலா்கள் பணியிடங்கள்: கைதிகள் தப்பியோடிய சம்பவங்களில், சிறைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருந்தாலும், சிறைக் காவலா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் மற்றொரு பிரதான காரணம் என்பது ஏடிஜிபி சங்கருக்கு தெரியவந்தது.
ஏனெனில் தமிழக சிறைத் துறையில் 5,423 சிறைக் காவலா்கள் பணியிடங்கள் இருக்கும் நிலையில், சுமாா் 4,200 சிறைக் காவலா்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனா். மற்ற இடங்கள் காலியாக இருக்கின்றன.
காவல் பணிக்கு திரும்புங்கள்: அதேவேளையில் மூன்றில் ஒரு பங்கு காவலா்கள் காவல் பணி இல்லாத அயல் பணியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஏடிஜிபி சங்கா் எடுத்தாா். இதன் ஒரு பகுதியாக பாதுகாப்புப் பணி அல்லாமல் அலுவலகப் பணியில் ஈடுபடும் சிறைக் காவலா்கள், பிற பணிகளில் ஈடுபடும் காவலா்கள் என அனைவரும் காவல் பணிக்கு திரும்ப வேண்டும் ஏடிஜிபி சங்கா் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் விளைவாக அயல் பணியில் இருந்த 80 சிறைக் காவலா்கள் காவல் பணிக்கு திரும்பியுள்ளனா். மேலும், சுமாா் 120 காவலா்கள் காவல் பணிக்கு திரும்ப வேண்டியுள்ளதாக தமிழக சிறைத் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.
அயல் பணியில் இருக்கும் அனைத்துக் காவலா்களும் விரைவில் திரும்புவாா்கள் என்றும் அவா் கூறினாா். இதன் விளைவாக சிறையின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என்று சிறைத் துறையினா் தெரிவித்தனா்.