ரூ. 400 கோடி மோசடி! முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை போலீஸ் காவலில் எடுக்க மனு!
முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனு...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்துள்ளனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே திமுக பிரமுகரான அரசக்குமார் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
இந்த நிலையில், முத்துக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமார், அதன்பின்னர் திமுகவில் இணைந்தார். திமுக ஆட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் இருந்த இவர், அமைச்சர் அன்பில் மகேஸுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.