FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சட்டம் ஒழுங்கு பிரச்னை; மக்கள் கிளைமேக்ஸ் எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா? டிடிவி தினகரன் கேள்வி!

சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருப்பது குறித்து....

டிடிவி தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”மெகா தொடர் போல நீளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை - மக்களே முன்வந்து கிளைமேக்ஸ் எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா? அல்லது இது தான் தவெகவின் ஆறுமாத கால ஆட்சியின் சாதனை என பெருமையாக மார்தட்டிக் கொள்வாரா?

ஒருபுறம் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை, மறுபுறம் நூற்றுக்கணக்கான ரெளடிகள் காவல் துறையினரால் கைது என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை அபிராமபுரம், காசிமேடு, செம்பியம் என நேற்று மட்டும் மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தீபாவளி நாளன்று நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களுடன் ஒப்பிட்டு பதிலளித்த பட்டிமன்ற அமைச்சர், இடைவெளியின்றி அடுத்தடுத்த நாள்களில் அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு எந்த ஆண்டின் புள்ளி விவரங்களை தேடிக் கொண்டிருக்கிறார்?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், சட்டம் ஒழுங்கு பிரச்னையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் திரைப்படங்களின் நாள் வசூல் கணக்கை பார்ப்பது போல, ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் கொலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறாரோ? என்ற சந்தேகம்தான் எழுகிறது.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு அதிரடி காட்டி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரெளடிகள் கைது செய்யப்பட்டதாக "BUILD UP" செய்தி வெளியிட்ட அதே நேரத்தில் சென்னையில் ரெளடிகள் கொலை என்ற செய்தியும் இணைந்து வருவதை பார்க்கும்போது, காவல்துறை மீதான அதீத நம்பிக்கை, சட்டம் ஒழுங்கை போலவே சீர்கெட்டு போயிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

அன்றாடம் அரங்கேறும் வெட்டு குத்து, பழிக்குப் பழி, போன்ற படுகொலைச் சம்பவங்களால் ரத்தக்களறியாகவும், ரண கொடூரமான மாநிலமாகவும் தமிழகத்தை மாற்றி, பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கியதுதான் தவெகவின் ஆறு மாத கால ஆட்சியின் ஒரே சாதனையாக அமைந்திருக்கிறது.

எனவே, மக்களின் பாதுகாப்புதான் அரசின் அடிப்படை கடமை அதனை பேணி காக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதை விடுத்து வெற்று அறிக்கைகளும், செய்திக் குறிப்புகளும் வெறும் ஏட்டு சுரைக்காய்தான் என்பதை உணர்ந்து சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் சி. ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

AMMK General Secretary TTV Dhinakaran has raised questions regarding the law and order situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.