FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதற்காக ஆட்சியைத் தரவில்லை! எடப்பாடி பழனிசாமி கருத்து

கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதற்காக ஆட்சியைத் தரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தீபாவளியில் கொலை நடந்தது பற்றி கேட்டால், இதற்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த கொலைகளைப் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் பேசுகிறார், கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பேச ஆட்சியைத் தரவில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

Advertisement

Advertisement

தமிழக வெற்றி கழகம் அமைந்த ஆறு மாதம் ஆகிறது ஏற்கனவே சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுன் அவர்கள் ஆறு மாத காலத்தில் சிறப்பான ஆட்சித் தருவோம் என தெரிவித்து இருந்தார். ஆனால் சிறப்பான ஆட்சி தரவில்லை துயரமான ஆட்சியை தான் தந்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது கொலை நடக்காத நாளே இல்லை.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருகின்ற இடது கம்யூனிஸ்ட் வலது கம்யூனிஸ்ட்கூட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அவர்களும் தெரிவித்து இருக்கிறார்கள்.

தீபாவளி அன்று 11 கொலைகள் நடந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

தீபாவளியில் கொலை நடந்ததா ? இதற்கு முன்பு திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நடந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது அழகல்ல அரசு, எப்படிப்பட்ட சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தான் உங்களுக்கு ஆட்சி கொடுத்திருக்கிறார்கள்.

தமிழக முதல் முதலமைச்சர் அவர்களது கட்சி எம்எல்ஏக்களை இன்று சந்திக்கிறார் என்பது குறித்து கேட்டதற்கு, அவர் பயிற்சி கொடுக்கிறாரா? அட்வைஸ் கொடுக்கிறா? ஊடகத்தினர்தான் தெரிந்து வெளிப்படுத்த வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

இன்று தமிழகத்தை பொறுத்தவரை பற்றி கவலை இல்லை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு பற்றி கவலை இல்லை, எந்த ஒரு புதிய திட்டமும் தமிழகத்தில் வரவில்லை, தமிழகத்தில் வளர்ச்சி திட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பத்திரபதிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது. அங்கு பணம் சிக்குகிறது அப்படி என்றால் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தானே அர்த்தம். இப்போது டிமாண்ட் பண்ணி கேட்கிறார்கள்,

தமிழகத்தின் முதலமைச்சரோ என் பெயரைச் சொன்னால் அதிகாரிகள் நடுங்குவார்கள் என்றார், இவர் பெயரை சொன்னால் அதிகமாக பணம் கேட்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

லஞ்சமே இல்லை என்றால் எதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை போடுகிறது .தீபாவளி அன்று கூட பல அலுவலகங்களில் சோதனை போடப்பட்டது. இந்த சோதனையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள் ஒரு ஆட்சியின் சிறப்பு ஆறு மாத காலத்தில் தெரிந்து விடும். இந்த ஆறு மாத காலத்தில் என்ன நடந்தது?

விதிகளை மீறும் தொழிற்சாலை மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித் தாளில் வந்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என செய்தி வந்திருக்கிறது. மூடுவது சர்வசாதாரணம். ஆனால் திறக்கப்பட வேண்டும்.

மின்சாரத்தை துண்டிக்கிறீர்கள். இதனால் ஒன்றரை லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். அந்த குடும்பத்தை யார் காப்பாற்றுவது?

குறைகள் இருந்தால் இருந்தால் அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து சரி செய்ய வேண்டும் என கூற வேண்டும் .

தொழிற்சாலைகள் மூடினால் அவர்கள் எப்படி கடனை திருப்பி செலுத்த முடியும். உற்பத்தி ஆனால்தானே அரசுக்கு வரி கிடைக்கும் .இதை பற்றி கவலை இல்லை. ஏதோ ஜாக்பாட்டில் ஆட்சி அமைந்து, அமைச்சர் ஆக்கிவிட்டார்கள். மக்களின் கஷ்டம் தெரியாது, நிறுவனத்தை நடத்துபவர்கள் பற்றியும் தெரியாது, எதுவும் தெரியாது.

திடீரென அமைச்சர் ஆனால் அப்படித்தான் இருக்கும், 467 தொழிற்சாலைகளைப் பார்த்து குறைபாடு இருந்தால் அவர்களுக்கு தெரிவித்து அவர்கள் சரி செய்து கொள்வார்கள், அதை விட்டுவிட்டு அதிகாரம் கிடைத்துவிட்டது, அதிகார போதையில் இருக்கிறது என்பதால், தொழிற்சாலைகளை மூடிவிட்டால் யார் தொழிற்சாலையை தொடங்குவார்கள்? இதனால்தான் மூன்று பெரிய நிறுவனங்கள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டது. பல்லாயிரக்கணக்கான வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டது. யார் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை தொடங்குவார்கள்? சென்றவுடன் சீல் வைக்கிறார்கள்? ஆயிரக்கணக்கான முதலீடு போட்டு யார் தொழிற்சாலை தொடங்குவார்கள்? அதனால் தான் சுணக்கமாக இருக்கிறது? இந்த ஆட்சி அமைந்த பிறகு எந்த தொழிற்சாலையும் வரவில்லை? இதனால் தான் புதிய தொழில் தமிழகத்திற்கு வரவில்லை. ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தொழிற்சாலையும் ஆந்திராவுக்கு சென்று விட்டது.

நான் தெரிவித்தால் அதற்கு ஆக்கபூர்வமான பதில் தெரிவிப்பதில்லை. ஏதோ பதில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். ஒரு அமைச்சர் என்றால் அவர்கள் துறையில் மக்களும் பாதிக்கப்பட கூடாது நிறுவனமும் பாதிக்கக் கூடாது, தொழிலாளர்கள் பாதிக்கக் கூடாது, அதேபோல மாசு கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்க வழிமுறை செய்ய வேண்டும்.

நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று நினைக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு, தமிழகத்தில் தொழிற்சாலைகள் புதியதாக வருவதற்கு இது ஒரு முட்டு கட்டையாக தான் இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

summary

Power was not given so that one could keep making comparisons with the past! – Edappadi Palaniswami’s remark

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.