FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாது ஏன்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாது குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்திருப்பது பற்றி...

34 வினாடிகள் முன்பு
தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
பகிர்:

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலையில் தங்களது கைகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமித்த உத்தரவை எதிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

அந்த மனுவில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த காலத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகளை முடித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவு மீறப்பட்டது என்றும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த ஜனவரி மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2027-ஆம் ஆண்டு இந்தப் பணிகள் முடிவடைய உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்தப் பிறகுதான் வார்டு மறுவரையறை செய்யப்படும், அதன்பிறகுதான், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டு பின்னர் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, வார்டு மறுவரையறை செய்ய 120 நாள்களும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய 30 நாள்களும், தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கு 90 நாள்கள் என மொத்தம் 240 நாள்கள் தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

2021-ஆம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கரோனா பாதிப்பு காரணமாக தற்போது நடைபெறுகிறது. இந்தப் பணிகள் முடியும்வரை எதுவும் செய்ய முடியாது. தங்களது கைகள் கட்டப்பட்டுளளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இதுபோன்ற பிரச்னைகள் வருவது ஏன்? பதவிக்காலம் முடியப் போகிறது எனத் தெரிந்தும் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்த ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில்மனுவில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

summary

Why are local body elections not being held? Tamil Nadu government explanation in the High Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.