மகளுடன் திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: பெண்ணின் தந்தை வெறிச்செயல்!
திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த வாலிபரை பெண்ணின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்தது குறித்து...
சென்னை: சென்னை பெரம்பூர் செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியில், திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த வாலிபரை பெண்ணின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(34) என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதேபோல், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் அவருக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த உறவைக் கைவிடுமாறு அந்த பெண்ணின் தந்தை ரமேஷிடம் பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும், ரமேஷ் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பழகி வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, சக்கரபாணி தோட்டத்தில் உள்ள ரமேஷின் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார், ரமேஷின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோ வழக்கில் கைதானவர் ரமேஷ்
இதற்கிடையே, கொலையுண்ட ரமேஷ், ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வரை சிறையில் இருந்தவர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ரமேஷின் மனைவி சங்கீதா உள்ளிட்ட குடும்பத்தினரும் அந்தப் பெண்ணுடனான அவரது உறவுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், உறவைத் தொடர்ந்ததால் ஏற்பட்ட ஆத்திரமே கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம், சம்பவத்தின் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் சென்னையில் மூன்று கொலைகள்!
சென்னையில் நேற்று ஒரே நாளில் காசிமேடு, அபிராமபுரம், செம்பியம் ஆகிய மூன்று பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தச் சம்பவங்கள் சென்னையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.