அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பற்றி...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், தற்போது திமுகவில் இருக்கும் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் அக்டோபர் 29 ஆம் தேதி சரணடைந்தார். அவரை நவம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகளையும் அதிலிருக்கும் ரூ. 4.5 கோடி பணத்தையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் வங்கிக் கணக்குகளையும் காவல்துறையினர் முடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, முத்துக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.