FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ. 148.91 கோடியிலான 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு!

அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளதைப் பற்றி...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில். - (கோப்புப்படம்)
பகிர்:

அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நிகழாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் அமோக வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. கடந்த மே 10 ஆம் தேதி தவெக தலைவர் ச. ஜோசப் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்றார்.

Advertisement

Advertisement

தமிழக வெற்றிக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷின் அறிவுரையின்படி, அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 17,707.10 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, மேற்படி புலங்களில் 13,233 எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

சமய இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ், இணை ஆணையர் நீதிமன்றங்களில் 23,815 எண்ணிக்கையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் 9,125 வழக்குகளில் இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகளிலிருந்து வரப்பெற வேண்டிய கேட்பு-வசூல் நிலுவைத் தொகையில் ரூ.213 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கோயிகளுக்கு சொந்தமான 34.82 ஏக்கர் நிலங்களுக்கு 15 கோயில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது. கணினிச் சிட்டாவில் தவறுகள் திருத்தம் செய்ய வருவாய் துறை கோட்டாட்சியரிடம் முறையீடுகள் செய்யப்பட்டு 262 ஏக்கர் நிலங்கள் 226 கோயில்களின் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான கடைகள், கட்டடங்களில் வாடகைக்கு இருப்போருக்கு, வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்த கோரிக்கை அறிவிப்புகள் உரிய கால இடைவெளியில் தவறாமல் வழங்கப்பட்டு வருகின்றன.

வாடகைதாரர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தியவுடன் உடனடியாக ரசீது வழங்குவதுடன், ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகைகளைக் கணக்கில் கொண்டு, மீதமுள்ள நிலுவைத் தொகை குறித்த விவரங்கள் துல்லியமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வாடகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்த விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கைப்பேசி குறுஞ்செய்திகள் வாயிலாகத் தகவல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

The Hindu Religious and Charitable Endowments Department has announced that 163.40 acres of temple land, valued at Rs 148.91 crore, have been recovered within six months of the government taking office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.