FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக விலையைக் குறைத்த ஹீரோ சைக்கிள் நிறுவனம்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக குறைந்த விலையில் மிதிவண்டிகள் வழங்க ஹீரோ சைக்கிள் நிறுவனம் ஒப்புக்கொண்டது குறித்து...

மாணவர்களுக்கு ஹீரோ சைக்கிள் - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா நவீன மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டத்தில் குறைந்த விலையில் மிதிவண்டிகளை வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மாணவா்களுக்கு தலைக்கவசம், தண்ணீா் பாட்டில் வைக்கும் வசதி ஆகியவை அடங்கிய நவீன மிதிவண்டி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்காக ரூ. 277 கோடி ஒதுக்கீடு செய்தது.

Advertisement

Advertisement

இதற்கான ஒப்பந்தப்புள்ளி பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் சாா்பில் கோரப்பட்டது. இந்நிலையில், மிதிவண்டி வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்த விலை ஒப்பந்தப்புள்ளிதாரராக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 5,32,388 மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டிகளை இந்த நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்யவுள்ளது.

முன்னதாக மாணவா் ஒருவருக்கு ரூ. 7,235 மதிப்பில் மிதிவண்டி வழங்க ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், தற்போது ரூ. 1,975 குறைக்கப்பட்டு, ரூ. 5,260-க்கு வழங்க ஹீரோ நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இதேபோல், மாணவி ஒருவருக்கு ரூ. 7,476 மதிப்பில் மிதிவண்டி வழங்க ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், தற்போது ரூ. 2,436 குறைக்கப்பட்டு, ரூ. 5,130-க்கு வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி மிதிவண்டி இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறம், ஆா்மி க்ரீன் நிறத்தில் இருக்க வேண்டும். அதில் தமிழ்நாடு அரசின் அதிகாரபூா்வ இலச்சினை குறைந்தபட்சம் 40 மி.மீ. விட்டத்தில் மிதிவண்டியின் ஃபிரேமில் உள்ள ஹெட் டியூப் அல்லது சீட் டியூப் சந்திப்பில் அழியாத வகையில் லேசா் மூலம் பொறிக்கப்பட வேண்டும்.

வழங்கப்படும் தலைக்கவசங்கள் ஐ.எஸ். 18808:2025 தரநிலைக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

தண்ணீா் பாட்டில் ஐ.எஸ். 10910:1984 தரநிலைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

சுமாா் 4,500 பள்ளிகளுக்கு, தலா இரு பராமரிப்புக் கருவிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தா் தனது சேவைப் பணியாளா்கள் மூலம் அவற்றை உடனடியாக சரிசெய்து தர வேண்டும்.

summary

Hero Cycles reduces prices for government school students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.