தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்வு: உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அன்புமணி
நாட்டிலேயே மிகவும் அதிகமாக தமிழ்நாட்டின் அக்டோபர் மாத பணவீக்கம் 7.29% அதிகரித்துள்ளது தொடர்பாக...
நாட்டிலேயே மிகவும் அதிகமாக தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 7.29% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ள நிலையில், உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
நாட்டிலேயே மிகவும் அதிகமாக தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 7.29% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. தேசிய அளவிலான பணவீக்கம், இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக்குப்பிடிக்கும் அளவான 6 விழுக்காட்டைத் தாண்டி, 6.09 விழுக்காடாக அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதை விட 1.20% கூடுதலாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களை விட கிராமப்புற மக்கள் தான் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளிவிவரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
இந்தியா முழுவதுமே உணவுப் பொருள்கள், எரிபொருள்களின் விலை உயர்வு தான் பணவீக்கத்திற்கு வகை செய்துள்ளன என்றாலும் கூட, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதலே அதிகரித்துவரும் அரிசி விலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது தான் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் ஆகும்.
மக்களை பாதிக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும்படி கடந்த 4 மாதங்களாகவே வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டம் தோல்வியடைந்து விட்டது. அதேபோல், ரூ.30 விலையில் சன்ன ரக அரிசி வழங்குவதாகக் கூறி விட்டு, நியாயவிலைக் கடை அரிசியையே மெருகூட்டி வழங்கியதால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் பணவீக்கம் உச்சத்தை அடைய இதுவே காரணம்.
தமிழ்நாட்டில் ஒருபுறம் தனி நபர் வருமானம் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் நிலையில், இன்னொருபுறம் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தால், அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருள்களையும் மானிய விலையில் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அவற்றின் விலைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.