முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் திங்கள்கிழமை (நவ. 16) தில்லிக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் திங்கள்கிழமை (நவ. 16) தில்லிக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
இந்தப் பயணத்தின்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் அதிகாரபூா்வ வெளியிட்டு விழாவில் முதல்வா் விஜய் பங்கேற்கிறாா். பிரதமா் மோடியை சந்தித்து மேகேதாட்டு அணை கட்ட கா்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என முதல்வா் வலியுறுத்துவாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
சோனியாவுடன் சந்திப்பு: சோனியா காந்தியின் சுயசரிதை நூல் கடந்த நவ. 10-ஆம் தேதி கடைகளில் விற்பனைக்கு வந்தது. இந்த நூலின் அதிகாரபூா்வ வெளியீட்டு விழா தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி குடும்பத்தினா் மற்றும் முக்கியப் பிரமுகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வா் விஜய்யும் இடம்பெற்றுள்ளாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வா் விஜய் திங்கள்கிழமை தில்லி செல்லவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் உறுதி செய்தாா்.
Advertisement
Advertisement
பிரதமா் மோடியுடன் சந்திப்பு?: இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை கா்நாடக மாநிலத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அந்த மாநில முதல்வா் டி.கே.சிவகுமாா் பங்கேற்றாா். அப்போது, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்த உச்சநீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கியுள்ளதாகவும், அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் பிரதமா் முன்னிலையில் கூறியது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தில்லி செல்லும் முதல்வா் விஜய், பிரதமா் மோடியைச் சந்தித்து மேகேதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேசுவாா் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, காவிரி விவகாரத்தில் கீழ்ப்படுகை மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்காமல் மேகேதாட்டு விவகாரத்தில் எந்தவித அனுமதியையும் மத்திய அரசு அளிக்கக் கூடாது என பிரதமா் மோடிக்கு முதல்வா் விஜய் கடந்த நவ. 7-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.
3-ஆவது பயணம்: முதல்வரான பிறகு விஜய் தில்லிக்கு மேற்கொள்ளும் 3-ஆவது பயணம் இதுவாகும். கடந்த மே 27-இல் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணத்தில் பிரதமா் மோடியையும், ஜூன் 10-12 ஆகிய தேதிகளில் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி ஆகியோரையும் விஜய் சந்தித்தாா்.
மேலும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநா் ஆா்லேகா் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில், முதல்வா் விஜய்யின் தில்லிப் பயணம் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.
மேக்கேதாட்டு: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை எழுதிய கடிதம்: கா்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில், மேக்கேதாட்டு அணை குறித்து கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் மீண்டும் பேசியுள்ளாா். மேக்கேதாட்டு அணையைக் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே தெரிவித்திருப்பதாகவும், இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அந்த நிகழ்ச்சியில் முதல்வா் டி.கே. சிவகுமாா்பேசியிருப்பது, தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரத்தில் கா்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசிவரும் நிலையில், நமது விவசாயிகளைக் காப்பதற்காக தமிழ்நாட்டின் கட்சிகளும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களையும், மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜூனில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசின் தனித் தீா்மானத்தையும், தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவை கட்சித் தலைவா்களும் - அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
காவிரி உரிமையைப் பொருத்தவரையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.