சுகாதாரத் தரவுகள் வெளியீட்டை நிறுத்தியதா தமிழக அரசு? காரணம் என்ன?
சுகாதாரத் தரவுகள் வெளியீட்டை தமிழக அரசு நிறுத்தியிருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து..
தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் நோய் பரவல் உள்ளிட்ட மிக முக்கியமான, மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இந்த தரவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் அபாயம் நேரிடும் என துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு முழுக்க பருவக்கால நோய்கள் பாதிப்பு, நோய்ப் பரவல், பிரசவ கால மரணங்கள், தொற்று நோய்களால் நேரிடும் இறப்புகள் என பல்வேறு தகவல்கள் மாதாந்திர அறிக்கைகள் வாயிலாக சுகாதாரத் துறை மூலம் வெளியிடப்பட்டு வரும்.
இதன் மூலம், தமிழகத்தின் சுகாதார நிலை மக்களைச் சென்றடையவும், சுகாதார அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்கவும் பேருதவியாக அமையும்.
ஆனால், இந்த மாதாந்திர அறிக்கைகளை வெளியிடுவதை தமிழக பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் நிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது சுகாதார நிபுணர்கள் இடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், நோய் பாதிப்புகள், பரவல்கள் குறித்து மக்களும் சுகாதார அமைப்புகளும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிக்கைகள் நிறுத்தப்பட்டால், தற்போது தமிழ்நாட்டில் எந்த விதமான நோய் பரவி வருகிறது, எப்படி பரவல் அதிகரித்து வருகிறது? காய்ச்சல் ஏற்பட்டால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தெரிவிக்கப்படும்.
அது மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையின் திட்டங்கள், அதன் விளைவுகள், நோய்ப் பரவல் குறித்து ஆய்வு முடிவுகள், நோய்களின் விவரம், பரவல் விவரம் உள்ளடக்கிய மருத்துவ இதழும் வெளியிடப்படும். தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தோடு இந்த இதழ் வெளியிடப்படவில்லை.
இதற்குக் காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பது, தமிழக அரசு வெளியிடும் சுகாதாரத் தரவுகளின் உண்மைகள், தவறாக சித்திரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாகக் கூறியிருக்கிறது.
ஆனால், அதற்காக சுகாதாரத் துறையின் தரவுகளே வெளியிடப்படாது, நிறுத்தப்படும் என்பது நிச்சயம் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்று இத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
சுகாதாரத் துறையின் தரவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மே மாதம் முதல் தரவுகள் வெளியாகாததால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
சுகாதாரத் துறை தரவுகளை சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பாக சித்திரித்து வெளியிடுவதால் மக்களுக்கு தவறான தகவல்கள் சென்றடைவதாக அரசு அதிகாரிகள் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.