ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் 5 ரத்த காயங்கள்! பிரேத பரிசோதனையில் தகவல்
செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் மரணமடைந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது பற்றி...
மதுரை காவல் நிலையத்தில் மரணமடைந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் 5 ரத்த காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவரது மனைவி கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் அவரது உடலில் 5 ரத்த காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
கழுத்திற்கு கீழே கயிறு இருந்த காயத்திற்கு அருகே ஊசியால் குத்தியது போன்ற 3 காயங்களும் அதேபோல முதுகிலும் காயங்கள் இருந்ததாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
பாலகிருஷ்ணனின் கழுத்தின் இரு பக்கங்களிலும் சாய்வான கயிற்றுத் தடம் இருந்துள்ளது.
அதேபோல மூளையில் வீக்கமும் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இதயம், நுரையீரல்களில் வீக்கம் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.