FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் தற்கொலை: காவலர்கள் 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!

காவலர்கள் 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பாக...

56 வினாடிகள் முன்பு
செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர். - DIN
பகிர்:

மதுரை: செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் காவலர்கள் 3 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

தேனி மாவட்டம், தேவாரத்தைச் சேர்ந்த ரங்கப்பன் மகன் பாலகிருஷ்ணன் (42). லாரி ஓட்டுநரான இவருக்கு மனைவி சுதாவும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் கடந்த 3-ஆம் தேதி தேவாரத்திலிருந்து சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் கண்மாய்க் கரை அருகே வந்த போது, வாரியிலிருந்து திடீரென புகை வெளிவந்தது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். எனினும், லாரி முழுவதும் தீப்பிடித்ததில் ஏலக்காய் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து வாலாந்தூர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செய்ய வாலாந்தூர் காவல் நிலைய ஆய்வாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து, லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனை வெள்ளிக்கிழமை இரவு செக்கானூரணி காவல் நிலையத்துக்கு வரவழைத்தார். இதையடுத்து, அவரிடம் லாரியில் தீப்பிடித்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் கதவை உடைத்துப்பார்த்த போது, பாலகிருஷ்ணன் தனது சட்டையால் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள், பொதுமக்கள் செக்கானூரணி காவல் நிலையம் முன் திரண்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு கூடுதலாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரண விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 போலீஸாருக்கு சிபிசிஐடி காவல் துறை, சம்மன் அனுப்பியுள்ளது.

காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்விக்கு ஆகிய மூவருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

summary

The CB-CID has issued summons to three police officers in connection with the incident where a lorry driver, who had been brought to the Chekkanurani police station for questioning, died by suicide by hanging himself early Saturday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.