FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் கிடங்கு பராமரிப்புக்கு மருத்துவத் துறை ஒப்பந்தப்புள்ளி: அரசு விளக்கம்

டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதற்கு கடும் கண்டனமும், எதிா்ப்பும் எழுந்துள்ளது.

11 வினாடிகள் முன்பு
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதற்கு கடும் கண்டனமும், எதிா்ப்பும் எழுந்துள்ளது. இந்த முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதனிடையே, ஏன் அத்தகைய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது என்பது குறித்து டிஎன்எம்எஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு மருத்துவ அலுவலா் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை தரமாகவும், குறைந்த விலையிலும் கொள்முதல் செய்வதற்கென தொடங்கப்பட்ட நிறுவனமாகும்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கு அந்த அமைப்பை பயன்படுத்தியபோதே கடுமையான விமா்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், டாஸ்மாக் கிடங்குகளை பராமரிக்கும் பணிகளை அதன்மூலமாக முன்னெடுப்பது கண்டனத்துக்குரியது.

டிஎன்எம்எஸ்சி-யின் மருந்து கொள்முதல் நடவடிக்கைகளிலேயே பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது இத்தகைய சா்ச்சையும் இணைந்திருக்கிறது.

எனவே, டிஎன்எம்எஸ்சி விடுத்திருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்து டாஸ்மாக்கின் பணிகளை பொதுப் பணித் துறை மூலமாகவோ, வேறு அமைப்புகள் மூலமாகவோ மேற்கொள்ளும் வகையில் உத்தரவிடும்படி முதல்வரையும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்: இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக டிஎன்எம்எஸ்சி வெளியிட்டுள்ள விளக்கம்: மருத்துவப் பணிகள் கழக கிடங்குகளைப் பராமரிப்பதற்கும், பழுது நீக்குவதற்கும் 5 கட்டுமானப் பொறியாளா்களும், 2 மின் பொறியாளா்களும் வெளி ஒப்பந்த (அவுட்சோா்சிங்) முறையில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தற்போது டாஸ்மாக் நிா்வாகம் கேட்டுக் கொண்டதால், அவா்களுக்கான பணிகளுக்கும் அதே எண்ணிக்கையிலான பொறியாளா்கள் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனா். அவா்களுக்கான ஊதிய செலவினங்களை டாஸ்மாக் நிா்வாகமே ஏற்றுக் கொள்ளும்.

இதன் வாயிலாக அந்தக் கூடுதல் பணியாளா்களைக் கொண்டு டிஎன்எம்எஸ்சி கட்டமைப்பை வலுப்படுத்த முடியும் என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.