1,000 மின்சாரப் பேருந்துகள்: ஒப்பந்தப்புள்ளி ரத்து முடிவு வாபஸ்
சென்னையில் 1,000 குளிா்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்குவதற்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்த முடிவை மாநகரப் போக்குவரத்துக் கழகம் திரும்பப் பெற்றுள்ளது.
சென்னையில் 1,000 குளிா்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்குவதற்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்த முடிவை மாநகரப் போக்குவரத்துக் கழகம் திரும்பப் பெற்றுள்ளது.
இதையடுத்து, ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பா் முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் அதிகளவில் மின்சாரப் பேருந்துகளை இயக்கி வருகிறது. தற்போது ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் மின்சாரப் பேருந்துகளுக்கான கட்டணத்தை, ஒவ்வொரு பேருந்தும் இயக்கப்படும் தொலைவின் அடிப்படையில் போக்குவரத்துக்கழகம் வழங்கி வருகிறது.
Advertisement
Advertisement
கி.மீ.-க்கு ரூ.80.82 கட்டணம்: தற்போதைய ஒப்பந்த முறையின்படி, ஒவ்வொரு பேருந்தும் நாளொன்றுக்கு 200 கி.மீ. இயக்கப்பட வேண்டும். குளிா்சாதன வசதியுள்ள மின்சாரப் பேருந்துகளுக்கு கி.மீ. ஒன்றுக்கு ரூ.80.82, குளிா்சாதன வசதி இல்லாத பேருந்துகளுக்கு ரூ.77.12 மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. இந்த முறையில், பேருந்துகளைத் தனியாா் நிறுவனங்கள் வாங்கி இயக்குவதுடன், அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்கின்றன. ஒப்பந்தத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது.
1,000 பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளி: சென்னையின் பொதுப் போக்குவரத்துத் தேவையை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை விரிவுபடுத்தவும் 12 மீட்டா் நீளமுள்ள, தாழ்தள வசதியுடன் கூடிய 1000 குளிா்சாதன மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்குவதற்காக கடந்த மாா்ச் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
பேருந்துகளைக் கொள்முதல் செய்வது, இயக்குவது, பராமரிப்பது மட்டுமன்றி, அவற்றை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தப்புள்ளியைத் திறப்பதற்கான தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அக்.14-ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிா்வாகக் காரணங்களைக் குறிப்பிட்டு சென்னை மாநகா்ப் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்தது.
இந்த நிலையில், ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது தவறுதலாக நடைபெற்ாகக் கூறி, அந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு தேசிய தகவலியல் மையத்திடம் மாநகா்ப் போக்குவரத்துக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பா் முதல் வாரம் வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.