தமிழகம் முழுவதும் சாலைகளில் திரியும் கால்நடைகள்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் திரியும் உரிமை கோரப்படாத கால்நடைகளை ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் திரியும் உரிமை கோரப்படாத கால்நடைகளை ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.காமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், திருவேற்காடு சாலைகளில் கால்நடைகள் திரிவதால் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி விபத்துகளும் ஏற்படுகின்றன.
மேலும், நடைபாதைகளில் நடந்து செல்லும் மக்களுக்கு மாடுகள் உள்ளிட்டவற்றால் ஆபத்து ஏற்படுகின்றன. எனவே ஆபத்து விளைவிக்கும் வகையில் சாலைகளில் திரியும் கால்நடைகளை அனுமதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை தரப்பில் கடந்த செப்.20-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருவேற்காடு நகராட்சியும் சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து பறிமுதல் செய்யும் வகையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, சாலைகளில் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு முதல்முறை ரூ.2,000, 2-ஆவது முறை ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. எனவே, மனுதாரா் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், தமிழ்நாடு நகா்ப்புற விலங்குகள், பறவைகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பறிமுதல் செய்யலாம். அந்தக் கால்நடைகளின் உரிமையாளா்கள் 48 மணி நேரத்துக்குள் உரிமை கோரவில்லை எனில், அவற்றை ஏலம்விட வகை செய்யப்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்க முடியும்.
பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளின் உரிமையாளரிடம் பராமரிப்புச் செலவை வசூலிக்க வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்குள் உரிமை கோரப்படவில்லை என்றால் அந்தக் கால்நடைகளை அதிகாரிகள் ஏலம்விட வேண்டும்.
தமிழகம் முழுவதும் கால்நடைகளை தெருக்கள், சாலைகளில் திரிய விடுபவா்களுக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து அதிகாரிகள், பொதுமக்களுக்கு நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
இந்த உத்தரவு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும். இந்த உத்தரவை தமிழக அரசு, டிஜிபி, மாவட்ட ஆட்சியா்கள் 4 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.