அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து ரூ. 1.74 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல்: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்
நூலகங்களுக்கு அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து ரூ. 1.74 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
நூலகங்களுக்கு அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து ரூ. 1.74 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதை ஒழுங்குபடுத்தவும், மாநிலத்தின் கலாசார, நாகரிக பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் அரசுக்கு கடந்த 2024}ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத உயர் கல்வித் துறைச் செயலர், பொது நூலகத் துறை இயக்குநர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார்.
Advertisement
Advertisement
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், புத்தகங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, அகல்விளக்கு பதிப்பகம் தொடர்பான 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். "புத்தகங்கள் கொள்முதல் செய்வது பொதுப் பிரிவு, சிறப்புப் பிரிவு என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பெரியார் அறிவுலகத்துக்கான கொள்முதல் சிறப்புப் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பொது கொள்முதலுக்கு பொருந்தும் அதே கோட்பாடுகளும் நிபந்தனைகளும் சிறப்புக் கொள்முதலுக்கும் பொருந்துமா என்பதை அரசுத் தரப்பு தெளிவுபடுத்த வேண்டும். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்களைத் தேர்வு செய்து, கொள்முதல் செய்வதற்கு எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன?. இந்த நூலகங்களுக்கு கடந்த ஆண்டில் எத்தனை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன?.
புத்தகங்கள் இரு கட்டங்களாக கொள்முதல் செய்யப்பட்டபோது, நிபுணர் குழுவால் எத்தனை புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டன?. நிராகரிக்கப்பட்ட புத்தகங்களில் எத்தனை புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்துக்காக கொள்முதல் செய்யப்பட்டன?. 137 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவால் எத்தனை புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டன?. இந்தச் செயல்முறைக்கு அனுமதிக்கப்பட்ட காலம் என்ன?. அகல்விளக்கு பதிப்பகத்தின் 600 தலைப்புகளை நிராகரித்தது யார், எந்தக் கட்டத்தில், அதற்கு காரணம் என்ன?.
ஒரு பதிப்பகத்தின் 600 தலைப்புகளை நிராகரிக்க முடிந்தால், மீதமுள்ள 1,700 தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும் வாங்கவும் அலுவலர்களைத் தூண்டியது எது?. பெரியார் அறிவுலகத்துக்காக எத்தனை ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கப்பட்டன?. நேரடியாகப் பதிப்பகங்களிடமிருந்து வாங்கப்பட்டதா அல்லது புத்தக விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்டதா?. ஆங்கிலப் புத்தகங்கள், தமிழ்ப் புத்தகங்களுக்கு முறையே ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? முழுத் தொகையும் பயன்படுத்தப்பட்டுவிட்டதா?. நோடல், ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட நூலகர்களின் பணி, பொது நூலக இயக்குநராலும், பள்ளி கல்விச் செயலராலும் கண்காணிக்கப்பட்டதா?. இதுதொடர்பான கோப்புகள் அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டதா?. பள்ளிக் கல்விச் செயலர் எழுத்துபூர்வமான அறிவுறுத்தல் ஏதேனும் வழங்கினாரா? நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டும் எத்தனை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை?. அதற்கான காரணங்கள் என்ன என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
அரசுத் தரப்பு வாதம்
இதையடுத்து, அரசுத் தரப்பில் காணொலி மூலம் முன்னிலையான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன் ஆகியோர் முன்வைத்த வாதம்:
புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசுப் பணியாளர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பொது நூலகத் துறை இயக்குநர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்கும் வகையில், சிறப்புக் குழு அமைத்து பரிசீலிக்கப்படவுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து ரூ.1.74 கோடி மதிப்பிலான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்து 33,661 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்திடமிருந்து 39,241 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டன. சிக்மா பதிப்பகம் தொடர்பாக விசாரணை தொடங்கப்படவில்லை.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டுதல்களைக் கவனத்தில் கொண்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. புத்தகங்கள் கொள்முதல் நடைமுறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றனர்.
நீதிபதிகள் உத்தரவு
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் பொது நூலகத் துறை இயக்குநர் அளித்த விவரங்களையும் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் 20}ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.